Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பை இல்லா குமரி மாவட்டம்: முழுமை பெறுமா முன்மாதிரி திட்டம்?

Print PDF
தினமணி 03.09.2010

குப்பை இல்லா குமரி மாவட்டம்: முழுமை பெறுமா முன்மாதிரி திட்டம்?

களியக்காவிளை: குப்பைகள் இல்லாத மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தை மாற்ற முன்னோடி முயற்சி எடுத்துள்ள மாவட்ட நிர்வாகத்தின் செயல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் இயற்கைப் பண்ணை விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டிற்கு கடந்த ஏப்ரல் முதல் தேதியிலிருந்து மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

அது தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இதில் பெரும் வெற்றியும் கண்டது.

இதையடுத்து குப்பை இல்லாத மாவட்டத்தை உருவாக்க இலக்கு நிர்ணயித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது மாவட்ட நிர்வாகம்.

முதல்கட்டமாக செப்டம்பர் 1-ம் தேதி முதல் குப்பைகளை வீதிகளிலும், நீர் நிலைகளிலும் கொட்ட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதைத் தொடர்ந்து 2011 ஜனவரி முதல் தேதியிலிருந்து அபராதம், குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கவும், அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் திட்டமிட்டு பூஜ்ய கழிவு திட்ட கலந்துரையாடல்கள், பயிலரங்குகள் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறன்றன.

மேலும் திடக்கழிவு மேலாண்மை, குப்பைகளை உரமாக்குவது, மறுசுழற்சிக்கு உள்படுத்துவது உள்ளிட்டவை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு உருவாக்கும் பணியிலும் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்னர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளின் பின்புறங்களில் குப்பைகளைக் கொட்ட தனியாக குழிகளை வெட்டி வைத்திருந்தனர். இந்த குழிகளில் கொட்டப்படும் குப்பைகள் சில மாதங்களில் மக்கி இயற்கை உரமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்பகுதியில் வாழை மற்றும் காய்கறி செடிகளுக்கும், மரச்சீனி பயிரிடும் நிலத்திலும் இந்தவகை இயற்கை உரங்கள் பயன்படுத்தப்பட்டன. யூரியா, பாஸ்பேட் உள்ளிட்ட ரசாயன உரங்களின் வருகைக்குப் பின்னர் இயற்கை உரங்கள் மட்டுமன்றி குப்பைக் குழிகளும் காணாமல் போய்விட்டன.

இந்த குப்பைக் குழிகளை அனைத்து வீடுகளிலும் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்து இயற்கை பண்ணை விவசாயிகள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மத்தியில் தற்போது பலமாக எழுந்துள்ளது. புதிதாக வீடு, கட்டடங்கள் அமைப்பவர்கள் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதே போல குப்பைக் குழிகள் அமைக்க அறிவுறுத்துவதுடன், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு உரிய அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் சென்று பார்வையிட்டு, அதன் பின்னரே கட்டட அனுமதி வழங்கி, அதற்கான சொத்துவரி வசூலிக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். ஏற்கெனவே கட்டப்பட்ட பிற வீடுகளிலும் குப்பைக் குழிகள் அமைக்க அறிவுறுத்தப்பட வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தை குப்பை இல்லாத மாவட்டமாக மாற்றுவதில் இம் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளையும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் ஈடுபடுத்தி அனைத்துப் பகுதிகளிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.

இத் திட்டம் அரசின் கண்துடைப்பு திட்டமாக மாறிவிடாமல், குப்பையில்லாத மாவட்டமாகவும் இயற்கை விவசாயம் மட்டுமே செய்யப்படும் மாவட்டமாகவும் மாறி நாட்டிற்கே முன்மாதிரி மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் திகழ வேண்டும்.

Last Updated on Friday, 03 September 2010 09:20