Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காமன்வெல்த் போட்டியின்போது கொசுக்கடியில் இருந்து தப்பிக்க வீரர்களுக்கு வலை, ரீபில்லர்

Print PDF

தினகரன் 04.09.2010

காமன்வெல்த் போட்டியின்போது கொசுக்கடியில் இருந்து தப்பிக்க வீரர்களுக்கு வலை, ரீபில்லர்

புதுடெல்லி, செப். 4: டெல்லியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், காமன்வெல்த் போட்டியின்போது, கொசுக்கடியில் இருந்து வீரர்கள் தப்ப வலை, ரீபில்லர் ஆகியவை வழங்கப்பட உள்ளன.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் அடுத்த மாதம் 3 முதல் 14ம் தேதி வரையில் நடைபெற உளளன. இதற்கிடையே, டெல்லியில் இப்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரையில் 1,100 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தினமும் பல்வேறு மருத்துவமனைகளில் நோயாளிகள் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்ள பல நாடுகள் தங்கள் வீரர்களை டெல்லிக்கு அனுப்புவது குறித்து கவலை தெரிவித்துள்ளன. டெங்கு பரவல் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து 24 நாடுகள் வரையில் மத்திய அரசிடம் தகவல் கேட்டுள்ளன. தொடர்ந்து கொசு ஒழிப்பு பணியில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் தங்கும் விளையாட்டு கிராமம் மற்றும் மைதானங்களில் கொசு உற்பத்தியை தடுக்க மருந்து தெளிக்கப்படுகிறது.

டெங்கு பரவல் குறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி என்.கே.யாதவ் கூறுகையில், "டெங்கு குறித்து வீணாக பீதி கிளப்பப்படுகிறது. அது கட்டுப்பாட்டுக்குள்தான் உள்ளது. டெங்கு காய்ச்சல் 100 நாடுகளில் உள்ளது. ஆனால், டெல்லியில்தான் அதற்கு அதிகளவில் பயம் உருவாக்கப்படுகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றில் டெங்கு காய்ச்சல் உள்ளது. சர்வதேச சுற்றுலா பயணிகள் அங்கு செல்வதற்கு பயப்படவில்லை" என்றார்.

மேயர் பிரித்விராஜ் சகானி கூறியதாவது:

கொசு ஒழிப்பு பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக விளையாட்டு மைதானங்களில் கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 24 மணி நேரமும் அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வீடுகள், அலுவலகங்கள் போன்றவற்றில்தான் 10 முதல் 11 சதவீத கொசுக்கள் உற்பத்தியாகின்றன என்று தெரியவந்துள்ளது. இதனால் கொசு ஒழிப்பு பணியில் எங்கள் நடவடிக்கைக்கு மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும். வீடுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு மேயர் கூறினார்.

காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக்குழு வட்டாரங்கள் கூறுகையில், "மைதானங்களில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் இந்திய பூச்சி கட்டுப்பாட்டு துறை ஆகியவை கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன" என்றார்.

இதற்கிடையே, வீரர்களுக்கு கொசுக்களால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, அவர்களுக்கு கொசு வலை மற்றும் ரீபில்லர் கருவியும் மருந்தும் வழங்க டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது.