Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கொசு ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த புது திட்டம்: வீடு வீடாக ஸ்டிக்கர்

Print PDF

தினமலர் 09.09.2010

கொசு ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த புது திட்டம்: வீடு வீடாக ஸ்டிக்கர்

சென்னை : கொசு ஒழிப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர் மூலம், கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒரு லட்சம் ஸ்டிக்கர்களை வீடு வீடாக ஒட்ட, சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கொசு ஒழிப்பு பணிக்கு மக்களின் விழிப்புணர்வு குறித்து, சென்னை மாநகராட்சி ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இதில் நகரில் 120 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய்கள் 1,400 கி.மீ., நீளத்திற்கு மழைநீர் வடி கால்வாய்கள், மூன்று லட்சம் மேல்நிலைத் தொட்டிகள், 25 ஆயிரம் கிணறுகள், ஐந்தாயிரம் திறக்கப்படாத குடோன்கள் மற்றும் திறந்தவெளி நிலங்கள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு, அவற்றின் மூலம் அதிக அளவில் கொசு உற்பத்தியாவதாக கண்டறியப்பட்டுள்ளது.

கால்வாய்களிலும், மழைநீர் வடிகால்வாய்களிலும் தண்ணீர் தேங்குவதாலும், மேல்நிலைத் தொட்டிகள், கிணறுகள் மூடப்படாமல் இருப்பதாலும், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தி ஆவதாகவும் தெரிகிறது. மேலும் வீடுகளில் ஆங்காங்கே கிடக்கும் தேங்காய் ஓடு, ஆட்டுக்கல், டயர் மற்றும் தேவையில்லாத பிளாஸ்டிக் பொருட்களில் தேங்கும் மழைநீரிலும் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இந்த கொசுக்களால் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவுகின்றன. இதனால், மாநகராட்சி வீடுகளில் சாதாரணமாக போட்டு வைக்கும் பொருட்களில் மழைநீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வலியுறுத்தும் விழிப்புணர்வு துண்டு ஸ்டிக்கர்கள், வீடுவீடாக ஒட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

நகரில் உள்ள 1,400 குடிசைப் பகுதிகளிலும் கொசு உற்பத்தி அதிக அளவில் உள்ள இடங்களையும் கண்டறிந்து, அந்த பகுதிகளில் "கொசுக்களை கட்டுப்படுத்துவது நம் கையில்' என்ற விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி நேற்று தொடங்கியது. அது போல் நகர் முழுவதும் ஒரு லட்சம் ஸ்டிக்கர்களை ஒட்ட மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கொசு உற்பத்தியைத் தடுக்க பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, விழப்புணர்வு ஏற்படுத்த சுகாதாரத்துறை தயாரித்த "சிடி'யை., சினிமா தியேட்டர்களில் இரண்டு நிமிடம் இலவசமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.