Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அரசு மருத்துவமனைகளில் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ50 குறைப்பு

Print PDF

தினகரன்       21.09.2010

அரசு மருத்துவமனைகளில் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ50 குறைப்பு

சென்னை, செப்.21: பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து மற்றும் ஊசிக்கான கட்டணம், அரசு மருத்துவமனைகளில் 50 ரூபாய் வரை குறைத்துள்ளது.

சென்னையில் பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் 2 வகையான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து (நாசோவாக்) ரூ150க்கும், ஊசி மூலம் போடும் தடுப்பூசி (வாக்சி புளூ எஸ்) ரூ250க்கும் போடப்பட்டு வந்தது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாக போடப்படும் என்றும், தற்போது போடப்பட்டு வரும் தடுப்பூசியின் விலையும் குறைக்கப்படும் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், சென்னை கிங் இன்ஸ்டிடியூட்டில் போடும் தடுப்பூசி ரூ50 குறைக்கப்பட்டது. அதன்படி, தடுப்பு மருந்துக்கு ரூ100, தடுப்பூசிக்கு ரூ200 என நேற்று முதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இதுதவிர, சென்னை மாநகராட்சி சார்பில் வள்ளுவர் கோட்டம், .வெ.ரா.பெரியார் சாலை, பெரம்பூர், திருவான்மியூர், சைதாப்பேட்டை, சூளை ஆகிய இடங்களில் உள்ள மாநகராட்சி மருத்துவ பகுப்பாய்வு மையத்தில் தடுப்பூசி போடப்பட்டது.

தற்போது, சென்னையில் மட்டும்தான் கிங் இன்ஸ்டிடியூட், 6 மாநகராட்சி பகுப்பாய்வு மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் எளிதாக கிடைக்க வகை செய்ய வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் அதிக விலைக்கு தடுப்பூசி போடுவதற்கு தடை விதித்து, குறைந்த விலையிலேயே தடுப்பூசி போட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

முட்டை அலர்ஜியா? தடுப்பூசி வேண்டாம்

கிங் இன்ஸ்டிடியூட் ஆய்வக மருத்துவர் கூறியதாவது: சளி, இருமல், காய்ச்சல், தலைவலி ஆகிய அறிகுறிகளுடன் வந்தால் அவர்களுக்கு தடுப்பூசி போட மாட்டோம். அவர்கள் நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று பன்றிக்காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி, முட்டையிலிருந்து தயாரிக்கப்படுவதால் முட்டை சாப்பிடுவதால் அலர்ஜி ஏற்படுபவர்களுக்கும், 3 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடக் கூடாது.

சைனஸ், ஆஸ்துமா, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகிய நோயாளிகளுக்கு மூக்கு வழியாக செலுத்தும் மருந்தை அளிக்காமல் கையில் போட்டுக் கொள்ளலாம். இதுவரை கிங் இன்ஸ்டிடியூட்டில் 5 ஆயிரம் பேருக்கு பன்றிக் காய்ச்சல் வராமல் இருப்பதற்கான தடுப்பூசி போடப்பட்டுள்ளது.