Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாக்கடைக் கிடங்கான கண்மாய் பயன்படுகிறது; மீன்களுக்கு உணவாவதால் கட்டுப்படும் கொசுக்கள்

Print PDF

தினமலர் 22.09.2010

சாக்கடைக் கிடங்கான கண்மாய் பயன்படுகிறது; மீன்களுக்கு உணவாவதால் கட்டுப்படும் கொசுக்கள்

உசிலம்பட்டி: நகராட்சியின் சாக்கடை கிடங்காக உள்ள உசிலம்பட்டி கண்மாயில் உற்பத்தியாகும் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியை, அலங்கார மீன்பண்ணை உரிமையாளர்கள் செய்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் விருவீடு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அலங்கார மீன்கள் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போதிய மழை இல்லாமை, விவசாயத்தில் சரியான லாபம் இல்லாமல் போதல், முதலிய காரணங்களால் அலங்கார மீன்கள் உற்பத்தி செய்யும் தொழிலுக்கு இவர்கள் மாறியுள்ளனர். வண்ண, வண்ண கலர்களில் இவர்களிடம் வளரும் மீன்களுக்கு தேவையான உணவாக கொசுக்களின் முட்டை, லார்வா, கூட்டுப்புழுக்கள் தேவைப்படுகின்றன. விலை கொடுத்து வாங்க முடியாத இந்த மீன் உணவுகளை ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் சாக்கடைகளில் இருந்து சேகரிக்கின்றனர். தினமும் லட்சக்கணக்கான கொசுமுட்டைகள் இவர்களுக்கு தேவைப்படுகிறது. பத்துக்கும் மேற்பட்ட வார்டுகளின் கழிவு நீர், கொட்டப்படும் கோழிக்கழிவுகள், மாட்டு கழிவுகள், பன்றிக்கழிவுகள், மனிதக்கழிவுகள் சேரும் இடமாக மாறியுள்ள உசிலம்பட்டி கண்மாய் இவர்களுக்கு பெரும் உதவி புரிகின்றது. கொசுக்களின் உற்பத்தி இடமாக மாறியுள்ள உசிலம்பட்டி கண்மாய்க்கு அதிகாலையிலேயே இந்த மீன்பண்ணையாளர்கள் வந்து விடுகின்றனர்.

வலைகளைக்கொண்டு தண்ணீரின் மேற்பரப்பில், கொசுக்கள் மட்டுமல்லாது, நீரில் வாழும் சிறு, சிறு உயிரினங்கள் இட்டு வைத்துள்ள முட்டைகள், லார்வாக்கள், கூட்டுப்புழுக்களை சேகரிக்கின்றனர். சராசரியாக தினசரி 30 முதல் 50 பேர்கள் வரை இப்பணியில் ஈடுபடுகின்றனர். ஒருவர் சராசரியாக பத்து லிட்டர் முதல் 20 லிட்டர் வரையில் சாக்கடையின் மேற்பரப்பில் உள்ள பாசிகளை வலையினால் சேகரிக்கிறார். இந்த பாசிகளை பண்ணைகளுக்கு சென்று மேலும் வடிகட்டி, தேவையான கொசு முட்டைகள், லார்வாக்கள், கூட்டுப்புழுக்கள் என பிரித்து மீன்களுக்கு உணவாக்குகின்றனர். இது தினமும் நடப்பதால் பெரிய அளவில் கொசுக்களின் உற்பத்தி கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்படுகின்றது. அருகில் சென்றாலே குமட்டல் ஏற்படும் சாக்கடைக்குள் இவர்கள் இறங்கி சேகரிக்கும் கொசு முட்டைகளினால், உசிலம்பட்டியில் கொசுக்களின் தொல்லை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதனால் சாக்கடையால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பு பெருமளவு குறைகின்றது. விருவீடு கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக விருவீடு பகுதியில் அலங்கார வண்ண மீன்கள் உற்பத்தி செய்யும் தொழில் வளர்ச்சி பெற்று வருகின்றது. விவசாயத்தில் நம்பகமில்லாத தன்மை இருப்பதால் பெரும்பாலான விவசாயிகள் இந்த தொழிலையும் சேர்த்து கவனித்து வருகிறோம். மீன் குஞ்சுகளுக்கு உணவாகும் இந்த டாப்னியா, ரத்தப்புழுக்களை விலைக்கு வாங்க முடியவில்லை. சாக்கடைக்குள் இறங்கி சேகரித்து தரும் ஆட்களும் இல்லை. எனவே, நாங்களே தினசரி காலையில் வந்து சாக்கடைக்குள் இறங்கி சேகரிக்கும் பணியில் ஈடுபடுகிறோம். துர்நாற்றம், கழிவு என சகித்துக்கொண்டு இப்படி செய்தால் தான் மீன்குஞ்சுகளுக்கு உணவு கிடைக்கும் என்றார். ஜெயராஜ் என்பவர் கூறியதாவது: இப்படி சாக்கடைக்குள் இறங்கி சேகரிக்கும் போது உள்ளே கிடக்கும் பீங்கான், ஆஸ்பத்திரி ஊசிகள், மாட்டு எலும்புகள் என காலில் குத்தி விடுகின்றன. காலனிகளுடன் இறங்கி இந்த பணியில் ஈடுபட முடியவில்லை, என்றார்.