Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பன்றிக்காய்ச்சல் இலவச தடுப்பூசி விரைவில் மருந்துகள் பெறப்படும்

Print PDF

தினகரன் 27.09.2010

பன்றிக்காய்ச்சல் இலவச தடுப்பூசி விரைவில் மருந்துகள் பெறப்படும்

கோவை, செப். 27: ஏழைகளுக்கு பன்றிக்காய்ச்சலுக்கு இலவச தடுப்பூசி போட மருந்துகள் விரைவில் பெறப்படும் என்று சுகாதாரத்துறை முதன்மை செயலர் சுப்புராஜ் கூறினார்.

கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு 180க்கும் மேற்பட்டோர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் மட்டும் 24 பேர் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை முதன்மை செயலர் வி.கே.சுப்புராஜ் கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் சிகிச்சை சிறப்பு வார்டை நேற்று பார்வையிட்டார். பின்னர், நிருபர்களிடம் கூறியதாவது:

பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இதுவரை 800 பேர் கண்டறியப்பட்டு 700 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 100 பேர் மட்டுமே மருத்துவமனையில் உள்ளனர். கோவை மாவட்டத்தில் நிலைமை கட்டுக்குள் தான் உள்ளது. பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக சிறப்பு பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டாலும் அதுபற்றிய விவரங்களை உடனடியாக தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளோம்.

பன்றிக்காய்ச்சல் தடுப்பூசிக்கு தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் நோக்கத்தில் சென்னை கிங் இன்ஸ்டிடியூட் மற்றும் மாநகராட்சி சுகாதார மையங்களில் தற்போது தடுப்பூசி போடப்படுகிறது. 28ம் தேதி (நாளை) முதல் கோவை அரசு மருத்துவமனையிலும் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போடப்படும். தடுப்பூசிக்கு ரூ225ம்,மூக்கில் செலுத்தும் மருந்துக்கு

ரூ100ம் கட்டணமாக வசூலிக்கப்படும். தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லவேண்டிய கட்டாயம் பொதுமக்களுக்கு ஏற்படாது. வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு இலவச தடுப்பூசி போட தேவையான மருந்துகளை வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் மருந்துகள் பெறப்பட்டு தடுப்பூசி போடும் பணி துவங்கவுள்ளது. இவ்வாறு சுப்புராஜ் கூறினார். சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார், ஆர்எம்ஓ சிவப்பிரகாசம் ஆகியோர் உடன் இருந்தனர்.

நோயாளிகளுக்கு காய்கறி சூப்

பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அரசு செயலர் சுப்புராஜ் நேரில் விசாரித்தார். அப்போது நோயாளிகள் பலருக்கு வெளியில் இருந்து உணவு வாங்கி தரப்படுவது, நோயாளிகளுடன் தங்கியுள்ள உறவினர்கள் அடிக்கடி வெளியில் சென்று வருவது தெரியவந்தது.

பன்றிக்காய்ச்சல் கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனையில் இருந்தே தினமும் காலையில் காய்கறி சூப் வழங்கவேண்டும். நோயாளிகளுக்கான உணவையும் அரசு மருத்துவமனையில் இருந்து தான் தரவேண்டும். எக்காரணம் கொண்டும் வெளியில் இருந்து உணவு தரக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்