Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கால்வாய்களை சுத்தம் செய்யும் பணி தொடங்கியது

Print PDF

தினமணி 28.09.2010

கால்வாய்களை சுத்தம் செய்யும் பணி தொடங்கியது

திண்டுக்கல், செப். 27: அகரம் பேரூராட்சிப் பகுதியில் உள்ள குளங்களை ஒன்றோடு ஒன்று இணைக்கும் வகையில் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நிலத்தடி நீரை மேம்படுத்தும் நோக்கில் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள குளங்களை ஒன்றோடு ஒன்று இணைக்கும் வகையில் இயற்கையை மீட்டெடுக்க என்னும் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்னர் ஆட்சியர் மா.வள்ளலார் நடைமுறைப்படுத்தினார்.

இத்திட்டம் முதன் முதலாக குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம் தொப்பசாமி மலையில் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது இப்பகுதியில் சுமார் 70 சதவீதத்திற்கும் மேல் பணிகள் நிறைவடைந்துள்ளன. ஆங்காங்கே பெய்யும் மழை காரணமாக கால்வாய்கள் மூலம் குளங்களில் தண்ணீர் சேரத் தொடங்கி உள்ளது. குளங்களை இணைக்கும் திட்டத்தில் கிராம மக்களையும் ஈடுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் கிராமப் பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் ஊரக வேலை உறுதித் திட்டத்தை செயல்படுத்த இயலாத காரணத்தினால் இப்பகுதிகளில் என்.எஸ்.எஸ். மாணவர்கள் உதவியுடன் குளங்களை இணைக்கும் பணி நடைபெறுகிறது.

இதன்படி திண்டுக்கல் மாவட்டம், அகரம் பேரூராட்சிப் பகுதியில் மாவட்டத்தில் உள்ள 45 பள்ளிகளைச் சேர்ந்த 1,300 என்.எஸ்.எஸ். மாணவ, மாணவியர் உதவியுடன் குளங்களை இணைக்கும் பணியை ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

குளங்களுக்கு மழைநீரைக் கொண்டு செல்லும் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியை இந்த மாணவியர் திங்கள்கிழமை செய்தனர். இம்முகாம் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும்.