Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி குப்பையை கொட்ட காவனூர் கிராமத்தினர் மீண்டும் எதிர்ப்பு

Print PDF
தினமணி 06.10.2010

நகராட்சி குப்பையை கொட்ட காவனூர் கிராமத்தினர் மீண்டும் எதிர்ப்பு

அரக்கோணம்,​​ அக்.5: அரக்கோணம் நகராட்சி பகுதிகளில் சேரும் குப்பைகளை காவனூர் சில்வர்பேட்டையில் கொட்டுவதற்கு சில நாள்களாக அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காவனூர்,​​ சில்வர்பேட்டையில் உள்ள நகராட்சி குப்பை கொட்டும் தளத்தினால் ​ அப்பகுதியில் வசிப்போர் சுகாதார சீர்கேடுகளை சந்தித்து வருவதாக காவனூர் ஊராட்சி மன்றத் தலைவர் சரவணன் தலைமையில் 3 நாள்களாக வீடுகளில் கருப்புக் கொடி

ஏற்றும் போராட்டம் நடத்தப்படுகிறது.​ அத்துடன் குப்பை கொட்டும் வாகனங்களையும் அப்பகுதியினர் தடுத்து நிறுத்தி வந்தனர்.

அதையடுத்து ஞாயிற்றுக்கிழமை நகர்மன்றத்தின் அவசரக் கூட்டத்தில்,​​ குப்பைகள் கொட்டுவதை தடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில்,​​ திங்கள்கிழமை காலை குப்பை கொட்ட வந்த நகராட்சி ஊழியர்களை அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினர்.​ இப்போராட்டத்தில் இந்திய ஜனநாயக மக்கள் கட்சித் தலைவர் வி.எஸ்.ஐசக் ,​​ பாமக மாவட்டச் செயலர் பெ.​ சண்முகம்,​​ அம்பேத்கர் மக்கள் இயக்கத் தலைவர் ஏ,எம்.பார்த்தீபன் ஆகியோரும் பங்கேற்றனர்.

ராணிப்பேட்டை கோட்டாட்சியர் முகுந்தன்,​​ வட்டாட்சியர் பழனிவேலு,​​ நகராட்சி ஆணையர் மனோகரன்,​​ டிஎஸ்பி மகேந்திரவர்மன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.​ அதையடுத்து திங்கள்கிழமை கொண்டு வரப்பட்ட குப்பைகளை மட்டும் கொட்டுவதற்கு கிராமத்தினர் அனுமதித்தனர்.