Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கொசு ஒழிப்புக்கு முன்னுரிமை : மாநகராட்சி கமிஷனர்

Print PDF

தினமலர் 07.10.2010

கொசு ஒழிப்புக்கு முன்னுரிமை : மாநகராட்சி கமிஷனர்

சென்னை : ""நகரில் குப்பை அகற்றும் பணி, கொசு ஒழிப்பு மற்றும் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறோம்,'' என மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் கூறினார்.

நேற்று அவர் அளித்த பேட்டி: சென்னை மாநகராட்சியில், ஏற்கனவே நடக்கும் பணிகள், தொடர்ந்து நடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கொசு ஒழிப்பு பணிக்கு, முக்கியத்துவம் கொடுக்கப்படும். கொசு ஒழிப்பு பணியில், ஈடுபடும், மலேரியா துறை ஊழியர்கள் எவ்வாறு பணி புரிகிறார்கள் என்பதை ஆய்வு செய்து, முறையாக மருந்து தெளிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

கொசு ஒழிப்பு புகை அடிக்கும் வாகனங்களில், நான்கு ரிப்பேராக உள்ளது. அவை சரி செய்யப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்படும். நகரில், குப்பை எடுக்கும் பணியும் தீவிரப்படுத்தப்படும். சாலை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்வதோடு, புதியதாக போடப்படும் சாலைகள், தரமாக போட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாநகராட்சியில், மண்டலம் வாரியாக பணிகளை ஆய்வு செய்ய மண்டல அதிகாரிக்கும் மேலாக, கண்காணிப்பு பொறியாளர் அந்தஸ்தில், முக்கிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெருங்குடி, கொடுங்கையூர் ஆகிய குப்பைக் கொட்டும் வளாகங்களில், குப்பையில் இருந்து உரம் மற்றும் செங்கல் தயாரிக்கும் பணி விரைவில் துவங்கப்படும்.

மழைக்காலத்தை சமாளிக்க, மாநகராட்சி ஆயத்தமாக உள்ளது. மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள பன்னிரெண்டு சுரங்கப் பாதைகளில், அறுபது மோட்டார் பம்புகள் வைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில், தண்ணீர் தேங்கினால் வெளியேற்ற எண்பது மோட்டார் பம்புகள் மாநகராட்சி வசம் தயார் நிலையில் உள்ளது. மக்கள் பாதிக்கப்பட்டு, குடியிருப்புகளை விட்டு வெளியேறினால், அவர்களுக்கு உணவு வழங்க, போதுமான உணவுப் பொருட்கள் இருப்பு உள்ளது.

ஒரு மணி நேரத்தில் 80 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் தயாரிக்கும் வகையில், 19 உணவு கூடங்கள் உள்ளன. அளவுக்கு அதிகமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டால், நிவாரணம் பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, பத்து மண்டலங்களுக்கும் ஐ..எஸ்., அதிகாரிகள் மேற்பார்வை அதிகாரிகளாக நியமிக்கப்படுவர். இவ்வாறு கமிஷனர் கூறினார்.

Last Updated on Thursday, 07 October 2010 07:46