Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆணையர் கார்த்திகேயன் பேட்டி மழை பாதிப்புகளை சமாளிக்க தயார் நிலையில் மாநகராட்சி

Print PDF

தினகரன் 07.10.2010

ஆணையர் கார்த்திகேயன் பேட்டி மழை பாதிப்புகளை சமாளிக்க தயார் நிலையில் மாநகராட்சி

சென்னை, அக்.7: சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்ட தா.கார்த்திகேயன் கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, அவர் ரிப்பன் மாளிகையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: பருவ மழையினால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க தீயணைப்பு, காவல் துறை, வருவாய், உட்பட 30க்கும் மேற்பட்ட துறை அதிகாரிகளுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தப்பட்டது. மாநகராட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மழை பாதிப்புகளை சமாளிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

சுரங்கப்பாதைகளில் மழைநீரை அகற்ற ஏற்கனவே 60 மோட்டார் பம்புசெட்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் 78 குதிரை சக்தி கொண்டதாகும். இது தவிர 88 மோட்டார் பம்புகள் மண்டல அலுவலகங்களில் தயாராக உள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கும் மக்களை தங்க வைக்க 54 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு உணவு வழங்க 4 பெரிய சமையல் கூடம் மற்றும் 15 சிறிய சமையற் கூடங்களும் இருக்கிறது.

மேலும், மழை கடுமையாக இருந்தால் அந்த நேரங்களில் தடுப்பு பணிகளை விரைவுபடுத்தி கண்காணிக்க ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்கலாம் என்று அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால்வாய்கள் மூலமே மழைநீரை வடியச்செய்ய வேண்டும். சில இடங்களில் கழிவுநீர் குழாய்கள் வழியாக மழைநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கழிவு நீரேற்ற நிலையங்களில் பாதிக்கிறது. இதை தடுக்க வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் தலைமைச் செயலாளர் தெரிவித்தார். சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதை கண்காணிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கொசுமருந்து அடிக்கப்படுகிறதா? கண்காணிக்க செயற்பொறியாளர்

சென்னையில் குப்பை தேக்கமின்றி அகற்றப்படும். சாலைகளில் உள்ள பள்ளங்களை தார்க்கலவை கொண்டு சரி செய்யப்படும். இது போர்க்கால அடிப்படையில் செய்யப்படும். புதிதாக தார்சாலை போடும் போது அதன் தரம் உறுதி செய்யப்படும். கொசுத்தொல்லை கட்டுப்படுத்தப்படும். இதற்காக சம்மந்தப்பட்ட ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை சரியாக செய்கிறார்களா, ஒவ்வொரு நாளும் எந்தந்த பகுதிகளில் கொசுமருந்து அடித்தார்கள், புகைபரப்பினார்கள் போன்ற விவரங்கள் மண்டல அளவில் பெறப்பட்டு கண்காணிக்கப்படும். இந்த மூன்று முக்கிய பணிகளும் நல்ல முறையில் தினமும் நிறைவேற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் அந்தஸ்தில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனியாக ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார். தெருவிளக்குகள் பராமரிப்பும் உறுதி செய்யப்படும். பெருங்குடி குப்பை வளாகத்தில் குப்பையில் இருந்து மின்சாரம், உரம் போன்றவை தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதை எதிர்த்து தனி நபர் ஒருவர் அப்பீல் செய்துள்ளார். அந்த அப்பீலை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்தார்.