Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் வெளியேற்றும் திட்டப்பணிகள் தீவிரம்

Print PDF

தினகரன் 07.10.2010

புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் வெளியேற்றும் திட்டப்பணிகள் தீவிரம்

விழுப்புரம், அக். 7: விழுப்புரம் புதிய பஸ்நிலையம் கடந்த 2000ம் ஆண்டு திறப்பு விழா கண்டது. தினமும் ஆயிரக்கனக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதற்கிடையில் மழைக்காலத்தில் பஸ்நிலையத்தில் மழை நீர் தேங்கியதால் ஓட்டுநர்கள், பயணிகள் அவதிப்பட்டு வந்தனர். மழை நீரை வெளியேற்ற தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் திட்டமிடப்பட்டது. அதற்காக ரூ.1.25 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பஸ் நிலையத்தில் இருபுறமும் வாய்க்கால் அமைத்து பின்னர் அந்த நீரை பம்புசெட் மூலம் அங்கு கட்டப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் சென்றடைய செய்யும் வகையில் திட்டமிடப்பட்டது. அந்த ஆழ்துளை கிணற்றில் வந்து சேரும் மழை நீரை சாலமேடு ஏரிக்கு திருப்பி விடும் வகையில் திட்டப்பணி கடந்த ஆண்டு துவங்கியது.

இதுவரை பணிகள் முழுமையாக முடியவில்லை. மழை பெய்தால் பஸ்நிலையத்தின் புதுவை பஸ் கள் நிற்கும் இடத்தில் மழை நீர் தேங்கியிருக்கும். கடந்த சில வாரத்திற்கு முன்பு பெய்த மழைக்கு கூட மழை நீர் குளம்போல் தேங்கியிருந்தது. இதற்கு காரணம் பணிகள் முடிக்கப்படாதது தான்.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது. மாவட்ட ஆட்சியர் பழனிசாமி மழை காலம் தொடங்கவிருக்கும் நிலையில் பணிகள் இன்னும் முழுமை பெறாமல் உள்ளது. என்ன காரணம் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மழை காலம் தொடங்குவதற்குள் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் புதுவை பஸ்நிற்கும் பகுதியில் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.

இதுபோல் புதிய பஸ்நிலையத்தை சுற்றியுள்ள பெருந்திட்ட வளாகம், கிழக்கு விஜிபி நகர், கமலா நகர் கோர்ட் வளாகம் போன்ற பகுதிகளில் மழை காலத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கும். மழை நீர் வெளியே செல்ல வழியில்லாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியே வரமுடியாத நிலை உருவாகியுள்ளது.

எனவே பஸ்நிலையத்திற்கு வழி வகுத்தாற்போல் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.