Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெரியாறு கால்வாய் குப்பையை அகற்றுவது யார்: நகராட்சி, பொதுப்பணித்துறை மோதல்

Print PDF

தினமலர் 08.10.2010

பெரியாறு கால்வாய் குப்பையை அகற்றுவது யார்: நகராட்சி, பொதுப்பணித்துறை மோதல்

மேலூர்: தண்ணீர் வரும் முன் பெரியாறு கால்வாயை சுத்தப்படுத்திய குப்பையை கரைகளில் குவித்து வைத்துள்ளனர். அவை மீண்டும் கால்வாயில் சரிந்து விழுவதுடன், அப்பகுதியில் துர்நாற்றம் வீசத் தொடங்கி உள்ளது.

அக். 2ல் வைகை அணையில் இருந்து ஒரு போக சாகுபடி பகுதியான மேலூர் பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கால்வாயில் தண்ணீர் வரும் முன், பெரிய கால்வாய்கள், சிறிய கால்வாய்கள் மற்றும் மதகு ஆகியவை சுத்தம் செய்யப்படும். விவசாயிகள் வசம் ஒப்படைக்கப்படும் இப் பணி, இந்த ஆண்டு பொதுப் பணித்துறை சார்பில் மேற் கொள்ளப்பட்டது. கால்வாயில் கடந்த ஓராண்டில் தேங்கியிருந்த குப்பையை இயந்திரங்களின் உதவியுடன் அள்ளி இரு கரைகளிலும் போடப்பட்டது. மலை போல் உயர்ந்துவிட்ட இக்குப்பை அப்புறப்படுத்தாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. மேலூர் நகராட்சிக்குட்பட்ட இடத்தில் செல்லும் பெரியாற்று கால்வாயில் அதிகளவு குப்பை அகற்றப்பட்டன. அள்ளிய குப்பையை அகற்றாமல் அங்கேயை விட்டு விட்டதால், அவ்வப்போது பெய்யும் மழையில் இவை சரிந்து மீண்டும் கால்வாயில் விழ ஆரம்பித்துள்ளது. இத்துடன் இதில் இருந்து கடும் துர்நாற்றம் ஏற்பட ஆரம்பித்துள்ளதால் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் அப்துல் ரசீத்திடம் கேட்ட போது : நகராட்சி எல்கைக்குட்பட்ட இடங்களில் கொட்டப்படும் குப்பையை நகராட்சி தான் அள்ள வேண்டும். நாங்கள் வாய்க்காலை சுத்தம் செய்யப் போவதை முன் கூட்டியே நகராட்சியிடம் தெரிவித்து, இருவரும் சேர்ந்து பணிகளை மேற் கொள்வோம் என்று கூறினேன். அவர்கள் வருவதற்கு தாமதம் ஏற்பட்டதாலும், தண்ணீர் திறக்கப்பட்டதாலும் நாங்கள் குப்பைகளை அள்ளி கரைகளில் போட்டுள்ளோம். இவற்றை அப்புறப்படுத்த வேண்டியது நகராட்சி நிர்வாகம் தான் என்று கூறினார்.

நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) அய்யனார் கூறியதாவது : கால்வாயை சுத்தம் செய்து, அதில் இருக்கும் மண்ணை அப்புறப்படுத்த வேண்டியது பொதுப் பணித்துறையினரின் வேலை. எங்களிடம் இருக்கும் ஒரு டிராக்டரை வைத்துக் கொண்டு, இவ்வளவு குப்பையை நாங்கள் அள்ள முடியாது. கடந்த ஆண்டும் நாங்கள் குப்பையை அள்ளவில்லை. கரைகளில் கிடக்கும் குப்பையை அள்ள வேண்டியது பொதுப் பணித்துறையினர் தான் என்று கூறினார்.

அரசு அதிகாரிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி, தங்கள் பொறுப்புகளை தட்டி கழிக்கின்றனர். இதனால் பெரிதும் பாதிப்பு அடைவது இப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் தான். இந்த குப்பையை அகற்ற வேண்டியது யார் ? என்பதை இவர்களுக்கு மேல் உள்ள அதிகாரிகள் முடிவு செய்து, உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.