Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

15 நாள்களுக்குள் பன்றிகள் அப்புறப்படுத்தப்படும்

Print PDF

தினமணி 20.08.2009

15 நாள்களுக்குள் பன்றிகள் அப்புறப்படுத்தப்படும்

கடலூர், ஆக. 19: கடலூரில் பன்றிகளை ஒழிக்க புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக, கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு தெரிவித்தார்.

பன்றிக் காய்ச்சல் குறித்த ஆலோசனைக் கூட்டம் கடலூர் நகராட்சியில் புதன்கிழமை நடந்தது.

கூட்டத்தில் நகராட்சித் தலைவர் பேசியது:

பன்றிக் காய்ச்சல் நோய் பற்றி அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

நகராட்சி ஊழியர்கள் மிகுந்த கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.

நகரில் நடமாடும் பன்றிகளுக்கும் பன்றிக் காய்ச்சலுக்கும் சம்பந்தம் இல்லை.

எனினும் ஏனைய சுகாதார நிலைகளைக் கருத்தில் கொண்டு, பன்றிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

நாய்கள், பன்றிகள் உள்ளிட்ட விலங்கினங்களை அழிக்கக் கூடாது என்பது, அரசின் கொள்கை.

எனவே பன்றிகளை சுடுவதற்கு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளிக்கவில்லை.

எனவே நகரில் இருந்து 10 கி.மீ. தூரத்துக்கு அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

ஹோட்டல்கள், திருமண மண்டபங்களில் மீஞ்சிப் போகும் உணவுப் பொருள்களை எடுத்துச் சென்றே பன்றிகளை வளர்க்கிறார்கள்.

எனவே மீஞ்சி போகும் உணவுப் பொருள்களை நகராட்சியே அப்புறப்படுத்தி, உரச் சேமிக்கும் கிடங்குக்கு அனுப்பி வைக்க நகராட்சி திட்டமிட்டு உள்ளது.

இதன் மூலம் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு, பன்றி வளர்ப்பு குறைய வாய்ப்புள்ளது என்றார் தங்கராசு.

ஆணையர் குமார் பேசுகையில், பன்றிகள் மற்றும் தண்ணீர் மூலம் பன்றிக் காய்ச்சல் பரவாது, மனிதர்கள் மூலமே பரவும் என்பதை, நகராட்சி ஊழியர்களும் உறுப்பினர்களும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

எனினும் 15 நாள்களுக்குள் பன்றிகள் அப்புறப்படுத்தப்படும். பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

வைரல் காய்ச்சல் என்று யாரும் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது.

நகராட்சி ஊழியர்கள் இது குறித்து வீடுவீடாகச் சென்று பார்த்து, நகராட்சிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் துணைத் தலைவர் தாமரைச் செல்வன், நகர் நல அலுவலர் லட்சுமி நாராயணன் நகராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 20 August 2009 08:20