Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாதுகாப்பு, சுகாதாரம், குடிநீர் வசதி இல்லை தனியார் பராமரிப்பில் பஸ் நிலையம் நகராட்சி நிர்வாகம் முடிவு

Print PDF

தினகரன் 13.10.2010

பாதுகாப்பு, சுகாதாரம், குடிநீர் வசதி இல்லை தனியார் பராமரிப்பில் பஸ் நிலையம் நகராட்சி நிர்வாகம் முடிவு

பொள்ளாச்சி, அக். 13: பொள்ளாச்சி நகரில் உள்ள புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டுகளில் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் மற்றும் பயணிகளின் போக்குவரத்து அதிகமானதால் கடும் இட நெருக்கடி ஏற்பட்டது. இப்பிரச்னைக்கு தீர்வு காண பஸ் ஸ்டாண்டிற்கு எதிரே உள்ள இடத்தில் புதிதாக பஸ் ஸ்டாண்ட் கட்ட முடிவு செய்யப்பட்டது. சுமார் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் இப்பணி துவங்கப்பட்டு விரைவாக முடிக்கப்பட்டது. தற்போது, நகரில் பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டுகள் என இரு பஸ் ஸ்டாண்டுகள் செயல்பட்டு வருகின்றன. இவ்விரு பஸ் ஸ்டாண்டுகளிலும் துப்புரவு பணிகள், பயணிகளுக்கான குடிநீர் வசதி, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணி களை நகராட்சி நிர்வாகமே மேற்கொண்டு வந்தது.

தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் இப்பணிகளில் தொய்வு ஏற்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக பல கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்டில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் தங்குதல், அசுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றால் பயணிகள் முகம் சுளிக்கும் அளவிற்கு பஸ் ஸ்டாண்டில் சுகாதாரக் கேடு ஏற்பட்டது. மேலும் பயணிகளுக்கு சரிவர குடிநீர் கிடைப்பதில்லை, பஸ் ஸ்டாண்டின் உட்புறங்களில் சுவரொட்டிகள் ஒட்டுதல், சுவர் விளம்பரங்கள் எழுதுதல் என பஸ் ஸ்டாண்டுகளில் அத்துமீறல்கள் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதுதொடர்பாக நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலரும் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பினர். பஸ் ஸ்டாண்டுகளில் இரவு நேரங்களில் தெரு விளக்குகள் எரியாததால் பிக்பாக்கெட் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண பஸ் ஸ்டாண்டுகளை பராமரிக்கும் பணியினை தனியார் வசம் ஒப்படைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து நகராட்சித் தலைவர் ராஜேஸ்வரி கூறியதாவது: பழைய பஸ் ஸ்டாண்டிலும், பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்டிலும் சுகாதாரக் கேடு ஏற்பட்டு பயணிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள நகராட்சியில் போதுமான ஊழியர்கள் இல்லை. ஆகவே இப்பணிகளை கவனிக்கும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு தேவையான குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்குதல், துப்புரவு பணி களை மேற்கொண்டு குப்பை கள் தேங்காமல் சுத்தமாக வைத்தல், இரவு நேரங்களில் கண்ட இடங்களில் படுத்து தூங்குபவர்களை பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியேற்றுதல், தெரு விளக்குகளை முறையாக பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை தனியார் மேற்கொள்வார்கள். இதற்கென ஆண்டுக்கு சுமார் ரூ. 6 லட்சம் செலவாகும் என்று மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இறுதி மதிப்பீடு தயாரிக்கப்பட்டு இரு பஸ் ஸ்டாண்டுகளையும் பராமரித்து பாதுகாக்கும் பணி விரைவில் தனியார் வசம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு ராஜேஸ்வரி கூறினார்.