Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருச்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி

Print PDF

தினமணி 14.10.2010

திருச்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி

திருச்சி, அக். 13: திருச்சி மாநகரில் கொசு மருந்து அடிக்கும் பணியை மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி புதன்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

இதுதொடர்பாக மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்சி மாநகரப் பகுதிகளில் கொசு உற்பத்தியை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மழைநீர் வடிகால், சாக்கடைகளில் நீர் தேங்கியுள்ள பகுதியில் கொசு மருந்து தெளிக்கப்பட்டு கொசுப் புழுக்களை ஆரம்ப நிலையிலேயே அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோட்டம் வாரியாக துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு குழு அமைத்து வார்டு வாரியாக குடியிருப்புப் பகுதியில் நீர் தேங்க வாய்ப்புள்ள தேவையற்ற கலன்களில் தேங்காய் ஓடுகள், டயர்கள், தகர டப்பாக்கள், பாட்டில்கள் ஆகியவை அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், முதிர்வடைந்த கொசுக்களை அழிக்க கொசு மருந்தடிக்கும் விசைத் தெளிப்பான் ஒன்றின் மூலமும், 18 சிறிய அளவிலான கருவிகள் மூலம் புகை மருந்தடிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அரியமங்கலம் கோட்டத்தில் 21, 22, 23, 24, 25 ஆகிய வார்டுகளில் இந்தப் பணி நடைபெற்று வருவதை ஆணையர் த.தி. பால்சாமி புதன்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்தப் பகுதிகளில் சமுதாய அமைப்பாளர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு கொசு உற்பத்தி குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. காலையில் 5 வார்டுகளுக்கும், மாலையில் 5 வார்டுகளுக்கும் என நாளொன்றுக்கு 10 வார்டுகளில் புகை மருந்தடிக்கப்பட்டு 6 நாள்களில் அனைத்து வார்டுகளையும் முதல் சுற்றில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கோட்டத் தலைவர் ஜி. ஜெரோம் ஆரோக்கியராஜ், மண்டல பூச்சியியல் வல்லுநர் பாலாஜி, நகர்நல அலுவலர் டாக்டர் கே.சி. சேரன், உதவி ஆணையர் முத்துக்கிருஷ்ணன், உதவிச் செயற்பொறியாளர் எஸ். அமுதவள்ளி, மாமன்ற உறுப்பினர் இரா. மூக்கன் உள்ளிட்டோர் இந்தப் பணியின் போது உடனிருந்தனர்.