Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

18 ஆயிரம் வீடுகளுக்கு கொசு மருந்து: நகராட்சி சுகாதாரப் படை தீவிரம்

Print PDF

தினமணி 14.10.2010

18 ஆயிரம் வீடுகளுக்கு கொசு மருந்து: நகராட்சி சுகாதாரப் படை தீவிரம்

நாமக்கல், அக். 13: நாமக்கல் நகராட்சிப் பகுதியில் கொசுக்களை முழுமையாக ஒழிக்கும் வகையில், 18 ஆயிரம் வீடுகளில் கொசு மருந்து மற்றும் கொசுப் புழு உற்பத்தித் தடுப்பு மருந்து தெளிக்கும் பணியில் 200 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா மற்றும் வைரஸ் காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் துரித நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, நாமக்கல் நகராட்சித் தலைவர் இரா.செல்வராஜ் உத்தரவின்பேரில், தீவிர கொசு ஒழிப்புப் பணி புதன்கிழமை துவங்கியது.

நகராட்சியில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் 120 பேர், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 80 பேர் என 200 பேர் களப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நகராட்சிப் பகுதியில் வீடுகள்தோறும் சென்று, தண்ணீர் சேமித்து வைத்துள்ள சிமென்ட் தொட்டிகள், டிரம்கள், பாத்திரங்கள் ஆகியவற்றில் அபேட் மருந்து தெளிக்கப்படுகிறது. இவை தவிர, தேவையற்ற இடங்களில் சேகரமாகும் தண்ணீரை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பழைய டயர்கள், பயன்படுத்தாத ஆட்டுக்கல், பூந்தொட்டி, மேல்நிலைத் தொட்டிகள், தீ அணைக்கும் வாளி, தேங்காய் ஓடுகள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்கி இருந்தால், அவற்றை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

களப் பணியாளர்களுக்கு மருந்து பாட்டில்களை வழங்கி நகர்மன்றத் தலைவர் இரா. செல்வராஜ் கூறியது: நகராட்சியில் உள்ள 30 வார்டுகளுக்கும் களப் பணியாளர்கள் செல்வார்கள். ஒவ்வொரு வீதியாகச் சென்று வீடுகளுக்கு மட்டுமல்லாது, பொதுக் கிணறுகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் ஆகியவற்றில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரிலும் கொசுப்புழு உற்பத்தியாகாமல் தடுக்க மருந்து கலக்கும் பணியில் ஈடுபடுவர்.

வீடு தேடி வரும் களப் பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தங்களது வீடுகளில் உள்ள கழிவுநீர்த் தொட்டி, சாக்கடைக் குழாய், கழிவுநீர்க் குழாய் ஆகியவற்றின் முகப்பில் கொசுவலை அடித்துப் பராமரிக்க வேண்டும். எந்த நிலையிலும் கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அபேட் மருந்து மட்டுமின்றி, கொசு அழிப்பு புகையும் நகராட்சி வாகனங்கள் மூலம் வீதி தோறும் அடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். சுகாதார அலுவலர் முகமது மூசா மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.