Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆவடி, ஊத்துக்கோட்டை, பொன்னேரியில் தயாரிப்பு தேதி குறிப்பிடாத குடிநீர் பாக்கெட்டுகள் அழிப்பு

Print PDF

தினகரன் 15.10.2010

ஆவடி, ஊத்துக்கோட்டை, பொன்னேரியில் தயாரிப்பு தேதி குறிப்பிடாத குடிநீர் பாக்கெட்டுகள் அழிப்பு

ஆவடி, அக். 15: ஆவடி நகராட்சி பகுதியில் உள்ள டாஸ்மாக் பார், பெட்டிக்கடை, குளிர்பான கடை, மளிகை கடைகளில் காலாவதி மற்றும் தயாரிப்பு தேதி குறிப்பிடப்படாத குடிநீர் பாக்கெட்டுகள் விற்கப்படுவதாக நகராட்சி தலைவர் விக்டரி மோகன், நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி ஆகியோருக்கு புகார்கள் வந்தன.

இதனை அடுத்து, நகராட்சி சுகாதார அதிகாரி (பொறுப்பு) மோகன், பூந்தமல்லி சுகாதாரத் துறை நல அலுவலர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் ஊழியர்களுடன் கடைகளுக்கு சென்று நேற்று அதிரடி சோதனை நடத்தினர். ஆவடி, திருமுல்லைவாயல், கோவில்பதாகை, பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில், தயாரிப்பு தேதி இல்லாத 1,000க்கும் மேற்பட்ட குடிநீர் பாக்கெட்டுகளும், காலாவதியான உணவுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை நகராட்சி வளாகத்தில் கொண்டு வந்து அழித்தனர்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை டாஸ்மாக் பார்களில் தரமற்ற தண்ணீர் பாக்கெட்டுகள் விற்கப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட சுகாதாரதுறை துணை இயக்குனர் சம்பத்திற்கு புகார் வந்தது.

அவரது உத்தரவின்பேரில் கச்சூர்ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார மேற்பார்வையாளர் தீனதயாளன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் தாரகேஸ்வரன், லோகநாதன் ஆகியோர் பென்னலூர்பேட்டை, கச்சூர், சீத்தஞ்சேரி ஆகிய பகுதியில் உள்ள டாஸ்மாக் பார்களில் நேற்று முன்தினம் சோதனை செய்தனர்.

சீத்தஞ்சேரி பாரில் தரமற்ற தண்ணீர் பாக்கெட்டுகள் 350 பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

பொன்னேரி:

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் உத்தரவின்பேரில் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் சம்பத் மேற்பார்வையில் மீஞ்சூர் வட்டார மருத்துவர் தினகரன் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் காசிநாதன், நீதிவாசன், பாலகுமார், முருகையன், சுந்தர்ராஜன், தங்கவேலு ஆகியோர் மீஞ்சூர் மற்றும் பொன்னேரியில் உள்ள 16 டாஸ்மாக் பார்கள் மற்றும் 28 குளிர்பான கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.

ரூ.10,000 மதிப்புள்ள காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் குளிர் பானங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுக்களை சம்பவ இடத்திலேயே அழித்தனர்.