Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வடகிழக்கு பருவ மழையை சமாளிக்க கூவம் - பக்கிங்ஹாம் கால்வாய் சீரமைப்பு

Print PDF

தினமணி 15.10.2010

வடகிழக்கு பருவ மழையை சமாளிக்க கூவம் - பக்கிங்ஹாம் கால்வாய் சீரமைப்பு

சென்னை சேப்பாக்கத்தில் சீரமைக்கப்பட்டு வரும் பக்கிங்ஹாம் கால்வாய்

சென்னை, அக்.14: வடகிழக்குப் பருவ மழையைச் சமாளிக்கும் வகையில் சென்னையில் உள்ள கூவம் ஆறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயினை தூர்வாரி, குப்பைகளை அகற்றும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

÷பொதுப் பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணிகள், வட கிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாகவே முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை நகரில் வடகிழக்கு பருவமழையைச் சமாளிக்கும் வகையில், கால்வாய்களில் மழை நீர் தேங்காமல் இருக்கவும், கால்வாயின் கரை பகுதிகளைச் சீர்படுத்தும் பணிகளுக்காகவும் ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் வடகிழக்கு பருவமழையைச் சமாளிக்கும் வகையில் கொசஸ்தலை ஆறு வட்டத்தின் கீழ் வரும் போரூர் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, பருத்திப்பட்டு தடுப்பணை மற்றும் அம்பத்தூர் கால்வாயினை சீர்படுத்துவதற்கு ரூ.89 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஆரணியாறு வட்டத்தின் கீழ் வரும் கூவம் ஆறு-மத்திய பக்கிங்ஹாம் கால்வாய்களின் கரைப் பகுதிகளை பலப்படுத்தியும், குப்பைகளை அகற்றி, சீர்படுத்தும் பணிகளுக்காகவும் ரூ.1.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.2 கோடி நிதி ஒதுக்கி பணிகள் நடந்து வருகின்றன.

கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கிய இந்தப் பணிகளை வட கிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாகவே முடிக்கப் பொதுப் பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டுகளின்போது வட கிழக்குப் பருவ மழையைச் சமாளிப்பதற்கு ரூ.4 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டு வந்தது. இப்போது, ஜவாஹர்லால் நேரு புனரமைப்புத் திட்டத்தின் கீழ் பொதுப் பணித்துறை மற்றும் சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.1,440 கோடியில் கால்வாய்கள் சீரமைப்பு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

Last Updated on Friday, 15 October 2010 10:11