Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ20 லட்சத்துக்கு டெண்டர் விடப்பட்டது பனையூர் ஏரி சீரமைப்பு பாதியில் நிறுத்தம்

Print PDF

தினகரன் 19.10.2010

ரூ20 லட்சத்துக்கு டெண்டர் விடப்பட்டது பனையூர் ஏரி சீரமைப்பு பாதியில் நிறுத்தம்

துரைப்பாக்கம், அக். 19: சோழிங்கநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட பனையூர் குடுமியாண்டித்தோப்பு ஏரி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. தற்போது ஏரியின் கிழக்குப் பகுதி கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இதே நிலை நீடித்தால் ஏரியே இருக்காது, எனவே ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து சோழிங்கநல்லூர் பேரூராட்சி மன்ற கூட்டத்தில், ஏரியை சீரமைக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதை செயல் அலுவலர் சம்பத், மாவட்ட கலெக்டரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி அதிகாரிகள் ஆய்வு நடத்தி, கலெக்டருக்கு அறிக்கை வழங்கினர்.

அதை ஏற்று, பேரூராட்சி நிர்வாகம் ஏரியை சீரமைத்து கரையைப் பலப்படுத்த வேண்டும் என்று கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். இதற்காக பேரூராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டது. ரூ20 லட்சத்துக்கு டெண்டர் எடுத்தவர், பொக்லைன் இயந்திரம் மூலம் ஏரியை ஆழப்படுத்தி சீரமைக்கும் பணியை தொடங்கினார்.

பணி 30 சதவீதம் நடந்த நிலையில், பணியை நிறுத்தும்படி செயல் அலுவலர் சம்பத் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பணி நிறுத்தப்பட்டது. இப்பணிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செயல் அலுவலர் சம்பத்திடம் கேட்டதற்கு, "ஏரியை சீரமைக்கும் பணிக்கான டெண்டர் கடந்த மாதம் விடப்பட்டு ஒப்பந்ததாரரிடம் பணி ஒப்படைக்கப்பட்டது. பணி தொடங்கி நடந்து வந்தது. இப்போது ஏன் பணி நிறுத்தப்பட்டது என்று நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. உயர் அதிகாரிகளிடமும், பேரூராட்சி தலைவரிடமும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்" என்றார்.