Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காய்ச்சல் பாதிப்பு பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் : சேலம் மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள்

Print PDF

தினமலர் 20.10.2010

காய்ச்சல் பாதிப்பு பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் : சேலம் மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள்

சேலம்: "சேலம் மாநகராட்சியில் காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்கள் ஃபோன் மூலம் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தால், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும்' என்று மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி தலைமையில் ஏடிஸ் கொசு ஒழிப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. மண்டல உதவி கமிஷனர்கள், பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், சமுதாய அமைப்பாளர்கள் ஆகியோருக்கு கொசு ஒழிப்பு குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. கொசு ஒழிப்பு பணியை முறையாக மேற்பார்வையிடவும் அறிவுரை வழங்கப்பட்டது. ஆலோசனை கூட்டத்துக்கு பின், மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:மழை காலங்களில் ஏடிஸ் கொசுக்கள் மூலம் டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவுகிறது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் நாள் ஒன்றுக்கு 10 வார்டுகள் வீதம் அனைத்து பகுதிகளிலும் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 20 கை புகை தெளிப்பான்கள் மற்றும் நான்கு வண்டிகள் மூலம் புகை தெளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு கடிதம் வழங்கப்பட்டு, பள்ளி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் அக்., 20, 21, 22 ஆகிய தேதிகளில் கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்படுகிறது. தியேட்டர்களில் கொசு ஒழிப்பு குறித்த விளம்பரம் செய்யப்பட உள்ளது. அனைத்து தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளிலும் தினசரி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விபரம் சேகரிக்கப்பட்டு, தனிக்குழு மூலம் சம்மந்தப்பட்ட பகுதிக்கு சென்று கொசு ஒழிப்புப் பணி மேற்கெள்ளப்படுகிறது.எனவே, காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்களின் விபரம் தெரிவித்தல் மற்றும் ஆலோசனைகளை 2210667 என்ற ஃபோன் எண்ணிலும், 96776 66257, 94435 14508, 98657 24276 ஆகிய மொபைல் ஃபோனிலும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் கூறலாம். மழை நீர் தேங்காமல் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Thursday, 21 October 2010 05:39