Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆரம்ப சுகாதார மையங்களை மேம்படுத்த ரூ.286 கோடி: பன்னீர்செல்வம்

Print PDF

தினமணி 22.08.2009

ஆரம்ப சுகாதார மையங்களை மேம்படுத்த ரூ.286 கோடி: பன்னீர்செல்வம்

சென்னை, ஆக. 21: தமிழகத்தில் ஆரம்ப சுகாதார மையங்கள், சுகாதார துணை மையங்கள், கிராம மருத்துவமனைகளை மேம்படுத்த ரூ.286 கோடி வழங்குமாறு மத்திய அரசை சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார்.

மாநில சுகாதார அமைச்சர்கள் மாநாடு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தலைமையில் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது: தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத் (என்ஆர்எச்எம்) திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த 2008-09-ம் ஆண்டுக்கு ரூ.604.78 கோடியும், 2009-10-ம் ஆண்டுக்கு ரூ.655.01 கோடியும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளதற்கு நன்றி.

தமிழகத்தில் மொத்தம் 1,533 ஆரம்ப சுகாதார மையங்கள் மூன்று செவிலியர்களுடன் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. இதனால் பிரசவத்தின்போது ஏற்படும் குழந்தை இறப்பு விகிதம் ஒரு லட்சத்துக்கு 79 எனக் குறைந்துள்ளது. இந்திய அளவிலான குழந்தை இறப்பு விகிதம் ஒரு லட்சத்துக்கு 301 என இருப்பதை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகும்.

அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களுக்கும் இணையதள வசதியுடன் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் தலைமையகங்களுக்கு உடனுக்குடன் மருத்துவ ஆய்வறிக்கைகளைப் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார துணை மையங்களில் பணியாற்றும் செவிலியர்களுக்கு செல்போன் வழங்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகளுக்கு உணவு: நாட்டிலேயே முதன்முறையாக தமிழக ஆரம்ப சுகாதார மையங்களில்தான், கர்ப்ப காலத்தில் பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. பிரவசத்துக்குப் பிறகும் மற்றும் கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட பெண்களுக்கும் இலவச உணவு அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார மையங்கள், கிராம மருத்துவமனைகளின் அடிப்படை வசதிகளை மேலும் மேம்படுத்த கூடுதலாக ரூ.286 கோடியை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஒதுக்க வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார்.