Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

டெங்கு காய்ச்சலை தடுக்க மாநகராட்சி ஊழியர்கள் வீதி வீதியாக பிரசாரம் ஒரேநாளில் 6 டன் குப்பை அகற்றம்

Print PDF

தினகரன்              28.10.2010

டெங்கு காய்ச்சலை தடுக்க மாநகராட்சி ஊழியர்கள் வீதி வீதியாக பிரசாரம் ஒரேநாளில் 6 டன் குப்பை அகற்றம்

சென்னை, அக்.28: டெங்கு காய்ச்சலை தடுக்க மாநகராட்சி ஊழியர்கள் வீதிவீதியாக சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வீடுகளில் கொசுப்புழு உற்பத்திக்கு காரணமான உபயோகமற்ற பொருட்களையும் அகற்றி வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 6 டன் குப்பையை அவர்கள் அகற்றினர்.

சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில் அந்தந்த பகுதி உதவி சுகாதார அதிகாரிகள் தலைமையில் துப்புரவு அதிகாரிகள், பூச்சியியல் வல்லுனர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மலேரியா கொசுத் தடுப்பு பணியாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தி நேற்று வீதி, வீதியாக சென்று டெங்கு காய்ச்சல், மலேரியா குறித்த விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

இந்த பிரசாரத்தின் போது, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். மேலும் 4 ஆயிரம் வீடுகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டினர். நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை ஆய்வு செய்யப்பட்டது.

அதில் 3 ஆயிரம் வீடுகளிலிருந்து கொசுப்புழு உற்பத்திக்கு காரணமாக இருந்த உபயோகமற்ற தேங்காய் ஓடு, பிளாஸ்டிக் கப்கள், உடைந்த வாளிகள், காலி பாட்டில்கள், தெருக்களில் இருந்த உபயோகமற்ற டயர்கள் என 6 டன் பொருட்களை மாநகராட்சி ஊழியர்கள் சேகரித்து குப்பை வளாகத்திற்கு கொண்டு சென்றனர்.