Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை மாநகராட்சியில் தனியார் மூலம் குப்பை சேகரிப்பு விரைவில் அமலாகிறது

Print PDF

தினகரன்               01.11.2010

கோவை மாநகராட்சியில் தனியார் மூலம் குப்பை சேகரிப்பு விரைவில் அமலாகிறது

கோவை, நவ.1: கோவை மாநகராட்சியில் மழை நீர் வடிகால், குப்பை சேகரிப்பு பணியை தனியார் வசம் ஒப்படைக்கப்படவுள்ளது. கோவை மாநகராட்சியில் சுகாதார பணிகள் முழு அளவில் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் 800க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். மாநகர் முழுவதும் 2700 துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சுகாதார பணியில் பல்வேறு சிக்கல் இருப்பதாகவும், பணி வேகமாக நடப்பதில்லை எனவும் புகார் அதிகரித்தது. இந்நிலையில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தனியார் மூலம் (அவுட்சோர்சிங்) நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

நகரில் 2761 வீதிகள், 72 வார்டு இருக்கிறது. இதில் குப்பைகளை சேகரித்தல், தரம் பிரித்தல், குப்பை மாற்று நிலையம் கொண்டு செல்லும் பொறுப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்படும். வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 3, 6வது வார்டு, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 16, 23, 24 வது வார்டு, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 25வது வார்டு, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 49 மற்றும் 49 வார்டுகளில் முதல் கட்ட குப்பை சேகரிப்பு தனியார் மூலம் நடத்தப்படும். இது மட்டுமின்றி, தெருக்களை கூட்டி சுத்தம் செய்தல், மழை நீர் வடிகால் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளும் தனியார் வசம் ஒப்படைக்கப்படும். முதல் கட்ட குப்பை சேகரிப்பு பணி நடத்தப்பட்ட இந்த 9 வார்டுகளையும் மாடல் வார்டுகளாகமாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இப்பகுதிக்கு தனியார் மூலம் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நியமிக்கப்படுவர்.

இவர்களுக்கு தினக்கூலி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. படிப்படியாக, அனைத்து வார்டுகளிலும் தனியார் மூலம் குப்பை சேகரிப்பு பணி செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.வெள்ளலூர் குப்பை கிடங்கில் உர தொழிற்சாலை, கழிவு கட்டமைப்பு, குப்பை பிரிப்பு பணி நடக்கிறது. இந்த பணிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். மேலும் நகரில் 96.50 கோடி ரூபாய் செலவில் திடக்கழிவு திட்டம் முழு அளவில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. நகரில் அனைத்து வார்டுகளிலும் வீடு, வீடாக குப்பை சேகரிப்பு பணி மேற்கொள்ளவேண்டியுள்ளது. அனைத்து வார்டுகளிலும் சுமார் 7 லட்சம் வீடு இருக்கலாம் என தெரியவந்துள்ளது. ஏற்கனவே 4.80 லட்சம் குப்பை கூடை இலவசமாக வழங்கப்பட்டது. அடுத்த கட்டமாக 4.80 லட்சம் குப்பை கூடை வழங்க மாநகராட்சியில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விரைவில், மாநகராட்சியுடன் 12 உள்ளாட்சிகள் இணைக்கப்படவுள்ளது.

இதன் மூலம் மாநகராட்சியில் சுகாதார பணிக்கு அதிக தொழிலாளர்கள் தேவைப்படுவர். எனவே, சுகாதார பிரச்னை ஏற்படாமல் தடுக்க தனியார் பங்களிப்பிற்கு மாநகராட்சி நிர்வாகம் அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளது. மாநகராட்சி மன்றத்திலும் தனியார் மூலம் குப்பை சேகரிப்பு பணிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. விரைவில், தனியார் மூலம் குப்பை அகற்றும் பணி நடைமுறைக்கு வரும்.