Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விரைவில் டெல்லியில் அறிமுகம் கொசு மருந்து புகையால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க புதிய மருந்து

Print PDF

தினகரன்                     02.11.2010

விரைவில் டெல்லியில் அறிமுகம் கொசு மருந்து புகையால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க புதிய மருந்து

புதுடெல்லி, நவ. 2: கொசு மருந்து புகையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும், இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் நலனை காக்கும் வகையிலும், பாதிப்பு இல்லாத புதிய கொசு மருந்து டெல்லியில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் வீடுகளில் இந்த மருந்தை கொண்டு புகை அடிக்கும் பணி நடைபெற உள்ளது.

டெங்கு, சிக்குன் குனியா என்று கொசுக்களால் ஏற்படும் பல்வேறு நோய்கள் டெல்லியில் வேகமாக பரவி வருகின்றன. இதனால் தொடர்ந்து பல கோடி ரூபாய் செலவில் கொசு மருந்துகளை அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

காமன்வெல்த் போட்டியின்போது, டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவியதை தொடர்ந்து கொசு மருந்து புகை அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. மைதானங்கள், பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு கிராமம் மற்றும் வீடுகளில் கொசு மருந்து புகை அடிக்கும் பணி தீவிரமாக நடந்தது. இதன் மூலம் அப்போது பாதிப்பு மிக குறைவாக இருந்தது.

ஆனால், கொசு மருந்து புகை, கொசுக்களுக்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்று தெரியவந்துள்ளது. இதில் அதிகளவு விஷத்தன்மை உள்ளது. மாலாதியான் ஆர்கனோபோஸ்போரஸ் பாய்சன் என்ற ரசாயன மருந்துதான், கொசு மருந்து புகை அடிக்க பயன்படுத்தப்படுகிறது. டெல்லியில் ஆண்டுக்கு 35 லட்சம் முதல் 40 லட்சம் வீடுகளில் இந்த புகை அடிக்கப்படுகிறது. இந்த புகை ஆண்டுக்கு 3 முறை மட்டுமே அடிக்க வேண்டும். அதற்கு மேல் அடிக்கவே கூடாது.

இந்த புகையால் மனிதர்களின் ஜீரண மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், இதை அதிகளவில் சுவாசித்தால் உயிரிழப்புகளும் ஏற்படும் என்று தெரியவந்துள்ளது. வெளிநாடுகளில் இந்த புகையை அடிக்கும் தவறதலாக புகை மண்டலத்தில் சிக்கி சிலர் இறந்துள்ளனர். மேலும், சாதாரணமாக கொசு மருந்து புகை அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் வாழ்நாள் குறைந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெளிநாடுகளில் கொசு மருந்து புகை அடிக்க சிந்தடிக் பைராதிராய்டு என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. இது மனித உடலுக்கு கெடுதல் செய்யாததுடன், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், கொசுக்களிடம் மட்டும் இது வீரியமாக செயல்படும். இந்தியாவில் இந்த மருந்துக்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை.

இதற்கிடையே, கொசுக்களால் பரவும் நோயை கட்டுப்படுத்தும் தேசிய திட்டம் (என்.வி.பி.டி.சி.பி.) மூலம் நகராட்சி கவுன்சில் பகுதிகளில் புதிய மருந்து மூலம் புகை அடிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் வெற்றி கிடைத்தால், டெல்லி முழுவதும் இந்த மருந்தை பயன்படுத்தியே கொசு மருந்து புகை அடிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.