Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுகாதாரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை 105 கடைகளுக்கு மாநகராட்சி அபராதம்

Print PDF

தினமணி 25.08.2009

சுகாதாரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை 105 கடைகளுக்கு மாநகராட்சி அபராதம்

மதுரை, ஆக. 24: மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலப் பகுதிகளில் சுகாதாரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை செய்தது தொடர்பாக 105 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ.12,700 வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்துள்ளதாவது: மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை சாலைகளில் கொட்டுவோர் மீதும், சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருள்கள் விற்பனை செய்வோர் மீதும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், உதவி கமிஷனர் (கிழக்கு) யு.அங்கயற்கண்ணி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் வடக்கு வெளி வீதி, நாயக்கர் புதுத்தெரு, கீழமாசி வீதி, கீழமாரட் வீதி, கீழவெளி வீதி, காமராஜர் சாலை, தெற்குவெளி வீதி, பேலஸ் சாலை ஆகிய பகுதிகளில் சுமார் 105 கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது உணவுப் பொருள்கள் திறவையாக வைத்து விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக ரூ.12,700 வசூல் செய்யப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கை தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.