Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெடுஞ்சாலை ஓரம் குவிகிறது 5 நகராட்சி, பேரூராட்சியின் குப்பை கொட்டுவது எங்கே? புதிய இடம் தேர்வு செய்ய கோரிக்கை

Print PDF

தினகரன்              09.11.2010

நெடுஞ்சாலை ஓரம் குவிகிறது 5 நகராட்சி, பேரூராட்சியின் குப்பை கொட்டுவது எங்கே? புதிய இடம் தேர்வு செய்ய கோரிக்கை

பூந்தமல்லி, நவ. 9: திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட சென்னை புறநகரில் மதுரவாயல், பூந்தமல்லி, வளசரவாக்கம், திருவேற்காடு, அம்பத்தூர் ஆகிய 5 நகராட்சி மற்றும் போரூர் பேரூராட்சி அமைந்துள்ளது.

இங்கு ஒரு நாளைக்கு 15 முதல் 21 டன் வரை குப்பை சேருகிறது. இந்த குப்பையை கொட்டுவதற்காக பூந்தமல்லி ஒன்றியம், குத்தம்பாக்கம் ஊராட்சியில் 2006&07ம் ஆண்டு தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் 70 ஏக்கர் புறம்போக்கு நிலம் கையகப்படுத்தியது.

இதில், அம்பத்தூர் நகராட்சிக்கு 40, திருவேற்காடுக்கு 7, வளசரவாக்கத்துக்கு 6, பூந்தமல்லிக்கு 6 என ஒவ்வொரு நகராட்சிக்கும், பேரூராட்சிக்கும் ஏக்கர் கணக்கில் பிரிக்கப்பட்டது.

இந்நிலையில் குத்தம்பாக்கம் ஊராட்சியில் குப்பை கொட்ட, அப்பகுதி குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். குப்பை கொட்டினால் சுகாதார கேடு, நிலத்தடி நீரும், சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நீரும் மாசடையும். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இது தொடர்பாக அம்பத்தூர் உட்பட 5 நகராட்சி, போரூர் பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள், ஆணையர்களிடமும் குத்தம்பாக்கம் பொதுமக்களிடமும் கருத்து கேட்டு, அதில் எடுக்கும் முடிவின்படி குப்பை கொட்ட முடிவு எடுக்கலாம் என்று கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி கருத்து கேட்கும் கூட்டம் கடந்த நவம்பர் 21ம் தேதி பூந்தமல்லியில் கலெக்டர் ராஜேஷ் தலைமையில் நடந்தது. இதில், எடுக்கப்பட்ட முடிவுகளை அரசுக்கும், உயர்நீதிமன்றத்துக்கும் கலெக்டர் தெரிவித்தார்.

இந்நிலையில் அம்பத்தூர் உட்பட 5 நகராட்சி மற்றும் போரூர் பேரூராட்சியில் சேகரிக்கும் குப்பையை நள்ளிரவு நேரத்தில் லாரியில் எடுத்து வந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை, பூந்தமல்லி & ஆவடி சாலை, மதுரவாயல் பைபாஸ் சாலை, போரூர் அடுத்த காரம்பாக்கம் பகுதி, காட்டுப்பாக்கம் சுடுகாடு ஆகிய பகுதிகளில் கொட்டுவதால், குப்பை மலைபோல் தேங்கி காட்சியளிக்கிறது.

கழிவு நீருடன் குப்பை சேர்ந்து சேறும் சகதியுமாகி துர்நாற்றம் வீசுகிறது. இரவு நேரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளில் தீவைக்கப்படுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு, தொடர்ந்து வாகனம் ஓட்ட முடியாத சூழ்நிலை உள்ளது.

அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு மூச்சு திணறல் மற்றும் கொசு தொல்லையால் தூக்கம் கெடுகிறது. சுவாச கோளாறால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், தங்கள் எல்லையை விட்டு சாலையோரத்தில் குப்பை கொட்டுவதால் நகராட்சிகளுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதை தடுக்க அந்தந்த நகராட்சி சார்பில் இரவு நேர காவலாளிகளை நியமித்து கண்காணிக்கப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் குப்பையை ஏற்றிச்செல்லும் வாகனங்கள், எங்கு கொட்டுவது என்று தெரியாமல் அலைக்கழிக்கப்படுகிறது.

இதற்கு நிரந்தர தீர்வுகாண அம்பத்தூர் உட்பட 5 நகராட்சியும், போரூர் பேரூராட்சியில் சேரும் குப்பையை ஒரே இடத்தில் கொட்ட அரசும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி தலைவர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.