Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நல்ல திட்டம்; விழிப்புணர்வு இல்லையே

Print PDF

தினமலர்                11.11.2010

நல்ல திட்டம்; விழிப்புணர்வு இல்லையே

கோவை மாநகரை தூய்மையான நகராக மாற்ற, மாநகராட்சி நிர்வாகம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக, பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மட்கும் குப்பை, மட்காத குப்பையை வீடு தோறும் சேகரிக்க, இரு விதமான பிளாஸ்டிக் குப்பைக் கூடைகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மாநகராட்சி பகுதிகளில் மாட்டு வண்டிகளில் சென்று குப்பை அள்ளும் முறை ஒழிக்கப்பட்டு, புதிதாக வாகனங்கள் வாங்கப்பட்டு சுகாதார பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, மாநகரச் சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் "மொபைல் டாய்லெட்கள்' வைக்கப்பட்டுள்ளன. கோவையில் கடந்த ஜூனில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போது வாங்கப்பட்ட இந்த மொபைல் டாய்லெட்கள், தற்போது நகரின் பல் வேறு இடங்களில் மக்களின் பயன் பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளன. சாலையோரங்களில் சிறுநீர், மலம் கழிப்பதால் பொதுசுகாதாரம் சீர்கெடுவதை தடுக்க இந்த டாய்லெட்கள் பெரிதும் உதவுகின்றன. எனினும், இவற்றை பராமரிப்பதிலும், பொதுமக்கள் பயன்படுத்துவதிலும் பல்வேறு குறைபாடுகள் நிலவுகின்றன.

 மொபைல் டாய்லெட்கள் சிலவற்றில் போதிய தண்ணீர் சப்ளை இல்லை; சிலவற்றின் கதவுகள் மாயமாகியுள்ளன. சில இடங்களில் டாய்லெட் கழிவுகள் அப்படியே வெளியேறி ரோட்டில் ஓடுகிறது. இதனால், மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை முறையாக பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அதேவேளையில், மொபைல் டாய்லெட்களை பயன்படுத்துவோர், பயன்படுத்திய பின் தண்ணீரை திறந்துவிடுவதும், சுகாதாரம் பராமரிக்க மாநகராட்சிக்கு ஒத்துழைப்பதும் அவசியம். ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், பலரும் இந்த டாய்லெட்களை பயன்படுத்துவதில்லை. அதன்அருகிலேயே சாலையோரத்தில் சிறுநீர் கழித்து பொதுசுகாதாரத்தை சீர்கெடுக்கின்றனர். ஒருசில ஆசாமிகளோ, நள்ளிரவில் இந்த டாய்லெட்களில் இருக்கும் கதவுகளை கழற்றி திருடிச் சென்றுவிடுவதாகவும் கூறப்படுகிறது. பொதுசுகாதாரத்தை மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் எவ்வளவுதான் நல்ல திட்டங்களை அமல்படுத்தினாலும், மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லாவிடில் அவை பயனின்றி போய்விடும். எனவே, டாய்லெட்களை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுப்பதோடு, பொதுசுகாதாரத்தை காப்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோவை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.