Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தீவிர கொசு ஒழிப்பு பணி உபயோகமற்ற பொருட்கள் வீடு வீடாக அதிரடி அகற்றம்

Print PDF

தினகரன்                  15.11.2010

தீவிர கொசு ஒழிப்பு பணி உபயோகமற்ற பொருட்கள் வீடு வீடாக அதிரடி அகற்றம்

சென்னை, நவ.15: மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த உபயோகமற்ற பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில் தீவிர கொசு ஒழிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, தி.நகர் 127 வார்டிலுள்ள காமராஜர் காலனி, கார்ப்பரேஷன் காலனி ஆகிய இடங்களில் மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் தீவிர கொசு ஒழிப்பு பேரணி நேற்று நடந்தது. இதில், மாநகராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை கையில் ஏந்தியபடி வீடு, வீடாக சென்று கொசு உற்பத்திக்கு காரணமாக இருக்கும் உபயோகமில்லாத டயர், தேங்காய் ஓடு, ஆட்டுகல், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, மேயர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: கொசுக்களால் பரவும் மலேரியா, டெங்கு நோய்களை கட்டுப்படுத்த தீவிர கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 30 குழுக்கள் அமைக்கப்பட்டு வீடுகளில் உள்ள மேல்நிலை தொட்டி, கீழ்நிலை தொட்டிகளில் கொசுப் புழு கொல்லி மருந்து தெளித்து வருகின்றனர். வீடுகளில் தேங்காய் ஓடு உள்ளிட்ட உபயோகமற்றப் பொருட்கள் தேக்கி வைப்பதால் கொசு உற்பத்தியாகின்றன.

கடந்த 15 நாட்களில் உபயோகமற்ற 32 டன் பொருட்கள் வீடுகளில் இருந்து அகற்றப்பட்டன. கொசுவை ஒழிக்க புகை பரப்பும் பணியும் தீவிரமாக நடக்கிறது. கொசு ஒழிப்பு பணியில் 1,050 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 900 வீடுகளில் ஆய்வு செய்து 5 டன் உபயோகமற்ற பொருட்கள் அகற்றப்பட்டன. விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வீடுகளில் ஒட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு மேயர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் சுகாதார அதிகாரி குகானந்தம், கவுன்சிலர் ஜெ.கருணாநிதி ஆகியோர் பங்கேற்றனர்.

தி.நகர் கார்ப்பரேஷன் காலனியில் உபயோகமற்ற சைக்கிள் டயர்களை, மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்துகின்றனர்.