Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கார்த்திகை தீபத் திருவிழா 9 நடமாடும் கழிவறைகள் அமைக்க முடிவு

Print PDF

தினமணி                    16.11.2010

கார்த்திகை தீபத் திருவிழா 9 நடமாடும் கழிவறைகள் அமைக்க முடிவு

திருவண்ணாமலை, நவ. 15: கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக, திருவண்ணாமலையில் 9 நவீன நடமாடும் கழிவறைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த கழிவறைகளை நகர்மன்றத் தலைவர் இரா. ஸ்ரீதரன் திங்கள்கிழமை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது:

வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழாவைக் காண, திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர். இவர்களின் வசதிக்காக கோவை தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பயன்படுத்தப்பட்ட நவீன நடமாடும் கழிவறைகள் திருவண்ணாமலைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

சுகாதாரப் பணிக்காக 250 பணியாளர்களும், 600 தாற்காலிகப் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கொசு, ஈக்கள் ஒழிப்பு பணிக்கு 20 புகை மருந்து அடிக்கும் இயந்திரங்களும், குப்பைகள் அள்ளுவதற்காக நகராட்சியின் 6 வாகனங்கள் உள்பட 11 வாகனங்களும் பயன்படுத்தப்படும். 4 மாட வீதிகளும் நகராட்சி நிர்வாகம் சார்பில் பழுதுபார்க்கப்பட்டு விட்டது. தற்போது, செங்கம் சாலை, திண்டிவனம் சாலை உள்ளிட்டவை சீரமைக்கப்பட்டு வருகின்றன. சுவாமி வீதி உலா வரும் இடங்களில் கூடுதலாக மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்ய 6 தண்ணீர் லாரிகள் பயன்படுத்தப்படும். நகராட்சி அலுவலகத்தில் சுகாதார பிரச்னைகள் குறித்து புகார் தெரிவிக்க 222344 என்ற தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றார். பேட்டியின்போது நகர்மன்றத் துணைத் தலைவர் ஆர். செல்வம், நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் பாலசுப்பிரமணியன், ஆணையர் ஆர். சேகர், பொறியாளர் சந்திரன், நகர்நல அலுவலர் ராம்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.