Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை ஓட்டலில் மாநகராட்சி ரெய்டு உணவு கூடத்தில் சுகாதாரக்கேடு மோசம்

Print PDF

தினமலர்           24.11.2010

நெல்லை ஓட்டலில் மாநகராட்சி ரெய்டு உணவு கூடத்தில் சுகாதாரக்கேடு மோசம்

திருநெல்வேலி : நெல்லை ஓட்டலில் உணவு தயாரிக்கும் இடம் சுகாதாரமில்லாமல் இருந்ததால் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் ஓட்டல் பூட்டப்பட்டது. நெல்லை மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் உத்தரவுப்படி சுகாதார அதிகாரி (பொறுப்பு) சாந்தி அறிவுரையின் பேரில் உணவு ஆய்வாளர் ஏ.ஆர்.சங்கரலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் அரசகுமார், சாகுல்ஹமீது, கல்யாணசுந்தரம், மேஸ்திரிகள் பழனி, நடராஜன், துப்புரவு மேஸ்திரி அந்தோணி, விக்டர் அடங்கிய குழுவினர் நெல்லையில் உள்ள 10க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், டீக்கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். ஆய்வின் போது நெல்லை ஜங்ஷன் பஸ்ஸ்டாண்ட் அருகேயுள்ள ஒரு ஓட்டலில் உணவு தயாரிக்கும் இடம் சுகாதாரக்கேடாக இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் பழைய புரோட்டக்களை சூடு செய்து கொடுத்ததும், அழுகிய பல்லாரி உள்ளிட்ட காய்கறிகளை அப்புறப்படுத்தாமல் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த ஓட்டலை மூடுவதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். குறைகளை சரிசெய்த பின்னரே ஓட்டலை திறக்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கமிஷனர் எச்சரிக்கை : நெல்லை ஓட்டல்களில் சுகாதாரமான முறையில் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கவேண்டும். உணவு தயாரிக்கும் இடம் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் பேணவேண்டும் எனவும், வாடிக்கையாளர்களுக்கு வெந்நீர் வழங்கவேண்டும் எனவும், அவ்வாறு சுகாதாரமில்லாத ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்படும் என கமிஷனர் சுப்பையன் எச்சரித்துள்ளார்.