Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பொது மக்கள் அனைவருக்கும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து

Print PDF

தினமணி                01.12.2010

பொது மக்கள் அனைவருக்கும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து

கோவை, நவ. 30: பொதுமக்கள் அனைவருக்கும் நிபந்தனையின்றி பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து வழங்கப்பட வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

கோவை மாநகராட்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொதுமக்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து வழங்கப்படும் முறை குறித்து பெரும்பாலான கவுன்சிலர்கள் அதிருப்தி தெரிவித்தனர். கலைஞர் காப்பீட்டுத் திட்ட அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது. அதிலும் புகைப்படம் எடுக்காதவர்கள், புகைப்படம் எடுத்தும் அட்டை கிடைக்காதவர்கள் நிறைய பேர் உள்ளனர். எனவே அனைத்து பொதுமக்களுக்கும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்றனர்.

இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் ஆர்.வெங்கடாசலம் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் நடைபெற்ற விவாதம்:

.சுப்புலட்சுமி (.தி.மு.): தில்லை நகர் பகுதியில் பன்றிக் காய்ச்சலுக்கு இரண்டு பேர் பலியானார்கள். இதனையடுத்து பன்றிக் காய்ச்சல் தடுப்பு ஊசி போட பொதுமக்கள் ஆர்வமுடன் உள்ளனர். ஆனால் கலைஞர் காப்பீட்டுத் திட்ட அட்டை இருந்தால் மட்டும்தான் தடுப்பூசி என்று கூறுகின்றனர். இதனால் பலர் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். எங்கள் பகுதியில் குப்பை அள்ள வந்து கொண்டிருந்த டிராக்டர் நிறுத்தப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக சிறிய குப்பை வண்டிகளை அனுப்ப வேண்டும் என்றார்.

வெ..உதயக்குமார் (எதிர்கட்சித் தலைவர்): பாதாளாச் சாக்கடை திட்டத்தில் தோண்டப்பட்ட குழிகளை உடனுக்குடன் மூட வேண்டும். அதில் விழுந்து நிறைய பேர் அடிபடுகிறார்கள். மரணங்கள் சம்பவிக்கும் முன்பு மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

ஆர்.எஸ்.திருமுகம் (ஆளும்கட்சித் தலைவர்): உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு சமயத்தில் திட்ட சாலைகள் போடப்பட்டன. முக்கிய சாலையை இணைக்கும் குறுக்குச் சாலைகள் பள்ளமாக உள்ளது. இதனை செப்பனிட வேண்டும். நஞ்சுண்டாபுரம் சாலையில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து போடச் செல்லும் பொதுமக்கள் பேருந்து வசதி இன்றி நடந்தே செல்கின்றனர். எனவே அந்த மையத்தை ராமநாதபுரம் பகுதிக்கு மாற்றித்தர வேண்டும் என்றார்.

சி. பத்மநாபன் (சி.பி.எம்): வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் குறித்த கணக்கெடுப்பை சரிவர நடத்தி விடுபட்டவர்களை சேர்க்க வேண்டும். விடுபட்டவர்கள் நலத்திட்ட உதவிகளை பெற சிரமப்படுகின்றனர். உக்கடம், சொக்கம்புதூர் மயானங்கள் சீரமைக்கப்பட வேண்டும்.

என்.முருகேசன் (சி.பி.எம்): மாநகராட்சியின் பல பகுதிகளில் தெருவிளக்குகள் எரிவதில்லை. மாறாக பலஇடங்களில் பகல் 11 மணி வரை கூட விளக்குகள் எரிகிறது. இரவில் எரியாத விளக்குகள் எரியவும், பகலில் எரியும் விளக்குகள் அணையவும் உரிய நடவடிக்கை தேவை. வார்டுகள் தோறும் கொசு மருந்து தெளிப்பான் அவசியம் என்றார்.

பி.நாச்சிமுத்து (தி.மு.): குடிசைப்பகுதி மாற்று திட்டத்தின் கீழ் எனது வார்டில் 55 வீடுகள்கட்ட அனுமதி கிடைத்தது. சாலை, குடிநீர் வசதி செய்யப்பட்டும், 18 வீடுகள் கட்டப்படாமல் கிடக்கிறது. ஒப்பந்ததார்களிடம் சொல்லி பணியை முடுக்கி விட வேண்டும் என்றார்.

.சோபனா (காங்கிரஸ்): குடிசைப்பகுதி மாற்றுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கான காசோலை, குறித்த நேரத்தில் தரப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. பயனாளிகள் புகைப்படம் எடுத்து கொடுத்தால், வேறு கோணத்தில் எடுத்து வாருங்கள் என திருப்பி அனுப்படுகின்றனர் என்றார்.

எச்.மெகர்பன் (.தி.மு.): மேட்டுப்பாளையம் சாலையில் குழிகள் தோண்டப்பட்டு கிடக்கிறது. இதனை விரைவில் மூட நடவடிக்கை தேவை. காய்கறி மார்க்கெட்டில் அனுமதி பெறாத வியாபாரிகள் உள்ளனர். இதனால் குப்பைகள் அதிகம் சேர்கிறது. மாநகராட்சி பேருந்து நிலையத்தின் பின்புறம் கழிவுகள் அகற்றப்படாமல் கிடக்கிறது என்றார்.

ஆணையர் அன்சுல் மிஸ்ரா பேசியது:

குடிசை மாற்றுத் திட்டம் மத்திய, மாநில அரசுகளின் நிதிஉதவியுடன் நடக்கிறது. இதனால் புகைப்பட ஆவணங்கள் முறையாகக் கேட்கப்படுகிறது. மாநகராட்சியில் 36 ஆயிரம் தெருவிளக்குகள் உள்ளன. இதில் பராமரிப்பில் ஏதேனும் குளறுபடி ஏற்பட்டால் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.

வார்டுக்கு ஒரு கொசு மருந்து தெளிப்பான் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை பெயர் மாற்றம் செய்ய கோரும் விண்ணப்பத்துடன் உரியவரின் புகைப்படம் இணைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது இடைத்தரகர்களின் ஆதிக்கக்தை நீக்க உதவும் என்றார் ஆணையர்.

Last Updated on Wednesday, 01 December 2010 10:44