Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மலைபோல் குவியும் குப்பைகள் மழையால் துர்நாற்றம் அதிகரிப்பு புதிய இடம் தேடி அலையும் நகராட்சி

Print PDF

தினகரன்             02.12.2010

மலைபோல் குவியும் குப்பைகள் மழையால் துர்நாற்றம் அதிகரிப்பு புதிய இடம் தேடி அலையும் நகராட்சி

குமாரபாளையம், டிச.2: குமாரபாளையம் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளது. துர்நாற்றம் காரணமாக இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குமாரபாளையம் நகராட்சியில் தினமும் 10 டன் குப்பைகள் வெளியாகிறது. இந்த குப்பைகளை கொட்டி, தரம் பிரிப்பதற்கு உரக்கிடங்கு இல்லை. குப்பை கிடங்கு அமைக்க அரசு ரூ15 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. இதற்கு தேவையான இடம் கிடைக்காததால் நகராட்சி குப்பைகளை சேமிக்கவோ, தரம் பிரிக்கவோ, மறு சுழற்சி செய்து உரம் தயாரிக்கவோ முடியாத நிலை உள்ளது. நகராட்சியின் பல பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் லாரிகள் மூலம் எடுத்துவரப்பட்டு காவேரி நகர் புது பாலத்தின் அருகே சாலையோரம் கொட்டப்படுகிறது.

வெயில் காலங்களில் குப்பையின் பல பகுதிகள் உலர்ந்து காணப்படும். பழைய பேப்பர் பொறுக்குபவர்கள், சேகரித்து எடுத்துச் செல்வர். அழுகிய பொருட்கள் உள்ளிட்டவற்றை எலிகள், காக்கைகள் உண்ணும். சில நேரங்களில் ஏற்படும் தீ விபத்து காரணமாக குப்பைகள் எரிந்து, சிறிய துகள்களாக மாறிவிடும். இதனால் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை என்பது யாருக்கும் தொல்லை கொடுக்காத கழிவுப் பொருளாக மட்டுமே இதுவரை இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த பகுதியில் கனமழை பெய்து வருகிறது. குப்பைகள் உலர்வதற்கு வாய்ப்பு இல்லை. மழை பொழிவின் போது பறவை உள்ளிட்ட உயிரினங்கள் வெளியே வருவதில்லை. இதனால் நகராட்சி குப்பைகள் மலை போல் குவிந்துள்ளன. தொடர் மழை காரணமாக இந்த குப்பைகளில் இருந்து பயங்கர துர் நாற்றம் வீசுகிறது. காவேரி நகர் பகுதியில் வசிப்பவர்கள், கடந்து செல்வோர் உள்ளிட்ட பலரும் இந்த நாற்றத்தில் அவதிப்படுகின்றனர்.

இது குறித்து நகர மன்ற தலைவர் சேகரிடம். கேட்ட போது, ‘நகராட்சி பகுதியின் விரிவாக்கத்துக்கு தகுந்தாற்போல், குப்பைகளை அழிக்கும் பணிக்கு முக்கியத்துவம் இல்லை என்பது உண்மைதான். குப்பை கொட்டுவதற்கு போதுமான இடம் கிடைக்கவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக இந்த பிரச்னை தீர்க்கப்படாமல் இருக்கிறது. தற்போது பெய்து வரும் மழையால் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. குப்பையில் இருந்து பயனுள்ள மின்சாரம், உரம் போன்றவை தயாரிக்க அனுமதி கேட்டு அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பியுள்ளோம். விரைவில் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்என அவர் தெரிவித்தார்.

பயனில்லை..

நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் யாருக்கும் பயனில்லாமல் வீணாகிறது. சின்னச், சின்ன ஊராட்சிகளில் கூட குப்பைகள் பயனுள்ள முறையில் மறு சுழற்சி செய்யப்படுகிறது. மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரிக்கப்பட்டு மண்புழு உரம் தயாரிப்பது முதல், மின்சாரம் தயாரிப்பது வரை பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. முறையான இட வசதி இல்லை என்ற ஒரே காரணத்தால் குமாரபாளையம் நகராட்சியில் தினமும் வெளியாகும் 10 டன் கழிவுகள் பயனில்லாமல் வீணாகிறது.

குமாரபாளையம் நகராட்சியில் தினமும் 10 டன் குப்பைகள் வெளியேற்றப்படுகிறது. இடவசதி இல்லை என்ற காரணத்தால் இந்த குப்பைகள் தீயில் எரிந்து நாசமாகிறது. தற்போது மழை காலம் என்பதால் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் ஏற்படுகிறது. குப்பைகளை தரம் பிரித்து, பயனுள்ள வகையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.