Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வேலூர் மாவட்டத்தில் 6.78 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும்

Print PDF

தினமணி 28.08.2009

வேலூர் மாவட்டத்தில் 6.78 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும்

வாலாஜாபேட்டை, ஆக.27 உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மூலம் வேலூர் மாவட்டத்தில் 6.78 லட்சம் குடும்பத்தினர் பயனடைவர் என்று மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரன் கூறினார்.

இத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவோருக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. இதற்கான புகைப்பட பணி வரும் 30-ம் தேதி துவங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வேலூர் மாவட்டத்தில் காப்பீட்டுத் திட்டத்துக்கான

விண்ணப்பப் படிவங்கள் வழங்கும் பணியை வாலாஜா அடுத்துள்ள அரப்பாக்கம் ஊராட்சியில் வியாழக்கிழமை தொடக்கி வைத்து ஆட்சியர் பேசியது:

மருத்துவமனைகளில் பணக்காரர்கள் பெறும் நவீன மருத்துவ வசதிகளை, கிராமப்புற ஏழை, எளிய மக்கள் இத் திட்டத்தின் மூலம் பெறலாம்.

இத் திட்டத்தில் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம் மற்றும் அதற்குக் குறைவாக உள்ள அனைத்துக் குடும்பத்தினரும் சேரலாம். அனைத்துத் தொழிலாளர் நல வாரிய அமைப்புகளைச் சேர்ந்த அனைவரின் குடும்பத்தினரும் பயன்பெறலாம்.

திட்டத்தின் காப்பீட்டு தொகையை அரசே ஏற்கும். இதன் கால அளவு 4 ஆண்டுகள். இத் திட்டத்திற்காக அரசு ரூ.571 கோடியை ஒதுக்கி உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 6,78,973 குடும்பத்தினர் பயன் அடைவார்கள். அவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். இதன் மூலம், வேலூர் மாவட்டத்தில் உள்ள 8 மருத்துவமனைகளில் 51 நோய்களுக்கு சிகிச்சை பெறலாம். தேவைப்பட்டால் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் கூட சிகிச்சை பெறலாம்.

அடையாள அட்டைக்கான புகைப்படங்கள் எடுக்கும்பணி வரும் 30-ம் தேதி முதல் வாலாஜா வட்டம் சுமைதாங்கி, சாத்தம்பாக்கம் உள்பட பல கிராமங்களில் தொடங்குகிறது. இதில் 35 குழுவினர் ஈடுபடுகின்றனர். புகைப்படம் எடுக்கும் பணி 3 மாதங்களுக்கு நடைபெறும். விடுபட்டோர், அந்தந்தப் பகுதி வட்டாட்சியர் அலுவலகங்களில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.

ராணிப்பேட்டை கோட்டாட்சியர் சிற்றரசு வரவேற்றார். வாலாஜா வட்டாட்சியர் கிருபாகரன், ஆர்க்காடு ஒன்றிய குழுத் தலைவர் க.மணி, அரப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.பி. வெங்கடேசன். விஷாரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தனலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.