Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

துர்நாற்றம் வீசிய திருத்தங்கல் செங்குளம் சீரமைப்பு பணி துவக்கம்

Print PDF

தினகரன்             07.12.2010

துர்நாற்றம் வீசிய திருத்தங்கல் செங்குளம் சீரமைப்பு பணி துவக்கம்

சிவகாசி, டிச. 8: தொடர் மழைக்கு நிரம்பியும், கடும் துர்நாற்றம் வீசிய திருத்தங்கல் செங்குளம் கண்மாயை நகராட்சி சுகாதாரத்துறையினர் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர் மழையால் திருத்தங்கல் செங்குளம் கண்மாய் நிரம்பியது. விவசாயத்திற்கும், நிலத்தடி நீருக்கும் பயன்படும் கண்மாயின் பராமரிப்பு சரிவர இல்லாததால் முட்செடிகள் வளர்ந்திருந்தது. மேலும் பிளாஸ்டிக், பாலிதின் குப்பைகள் கண்மாயில் வீசப்பட்டன. இதனால், கண்மாயின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 10 நாட்களாக பெய்த மழையால் கண்மாய் நிரம்பியது. ஆனால், கண்மாய் நீரில் பாசிபடர்ந்தும், கழிவு பொருள்கள் மிதந்தும் காணப்பட்டன. கண்மாய் நீரில் கடும் துர்நாற்றம் வீசியது. இதனால், அப்பகுதியின் சுற்றுச்சூழல் மீண்டும் பாதித்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின்பேரில் செங்குளம் கண்மாயை சுத்தப்படுத்தும் பணியினை நகராட்சி சுகாதாரத்துறையினர் நேற்று மேற்கொண்டனர். செங்குளம் கண்மாயில் மிதந்த பிளாஸ்டிக் கழிவுகளை துப்புரவு ஊழியர்கள் அகற்றினர். மேலும் கரைபகுதியில் பிளிசிங் பவுடர் கரைசலை ஊற்றினர்.

கண்மாய் கரையோரங்களில் வளர்ந்திருந்த முட்செடிகளை அகற்றினர். இன்னும் ஒரிரு நாட்களில் செங்குளம் கண்மாய் சுத்தப்படுத்தும் பணி நிறைவு பெறும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.