Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

போடி நகராட்சிப் பகுதியில் காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்

Print PDF

தினமணி            15.12.2010

போடி நகராட்சிப் பகுதியில் காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்

 போடி, டிச. 14: போடியில் கடைகளில் விற்பனை செய்துவந்த காலாவதியான உணவு பொருள்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

போடியில் காலாவதியான பொருள்கள், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாத பொருள்கள், தயாரிப்பு நிறுவனப் பெயர் குறிப்பிடாத உணவுப் பொருள்கள் ஆகியவற்றை விற்பனை செய்யக் கூடாது என, நகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன் நகராட்சி ஆணையர் க. சரவணக்குமார் தலைமையில், நகராட்சி அதிகாரிகள் நகர் முழுவதும் சோதனை நடத்தி னர். அப்போது, கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

அதேபோன்று, செவ்வாய்க்கிழமை போடி நகராட்சி பஸ் நிலையப் பகுதிகளில்

ஆணையரின் அறிவுறுத்தலின்பேரில், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சென்றாயன், மெர்லி வர்கீஸ், மணிமாறன், சுகாதார மேற்பார்வையாளர்கள் கருப்பணன், ராமர் ஆகியோர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், சில கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான குளிர்பானங்கள், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.

இவ்வாறு ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள கெட்டுப்போன உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

இது குறித்து, ஆணையர் கூறியது:

பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில், காலாவதியான குளிர்பானங்கள், உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களும் கேடு விளைவிக்கும் வகையில் விற்பனை செய்யப்படும் காலாவதியான பொருள்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். பொருள்களை வாங்கும்போது, அதில் தயாரிப்பு நிறுவனம், தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி உள்ளதா என சரிபார்த்து வாங்க வேண்டும் என்றார்.