Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி தொடங்குகிறது : கொசு உற்பத்தியை தடுக்க ஆராய்ச்சி மையம்

Print PDF

தினகரன்       03.01.2011

மாநகராட்சி தொடங்குகிறது : கொசு உற்பத்தியை தடுக்க ஆராய்ச்சி மையம்


சென்னை, ஜன.3:

கொசு உற்பத்தியை தடுக்க தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் ஆராய்ச்சி மையம், இந்த மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளது என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கூவம் மற்றும் அடையாறில் கொசுப்புழு உற்பத்தியை தடுக்க, மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கட்டுமரங்களில் சென்று கொசு மருந்து தெளிப்பதற்காக புதிதாக 6 கட்டுமரங்களை மாநகராட்சி வாங்கியுள்ளது. இந்த கட்டுமரங்களில் சென்று கொசு மருந்து தெளிக்கும் பணியை மேயர் நேற்று சிவானந்தா சாலையிலுள்ள கூவம் ஆற்றில் தொடங்கி வைத்தார். பின்னர் மேயர் கூறியதாவது:

சென்னை முழுவதும் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் மாலை 5 முதல் இரவு 9 வரை வாகனங்கள் மூலம் புகைப்பரப்பி கொசு ஒழிக்கும் பணி நடக்கிறது. அதன்படி, 3,300 கி.மீ. நீளமுள்ள சாலைகளில் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது. கூவம் மற்றும் அடையாறில் கொசுப் புழு உற்பத்தியை தடுக்க ஏற்கனவே 9 கட்டுமரங்களும், 6 பைபர் படகுகள் மூலம் மருந்து தெளிக்கப்படுகிறது. மேலும் 6 கட்டுமரங்கள் புதிதாக வாங்கி பயன்படுத்தப்படுகிறது. கொசு ஒழிப்பு பணியில் 1,267 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொசு உற்பத்தியை தடுக்க உலக சுகாதார நிறுவனம் மற்றும் தமிழக சுகாதாரத் துறை பரிந்துரைக்கும் மருந்தை மாநகராட்சி பயன்படுத்தி, மனிதர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாத வகையில் கொசு ஒழிக்கும் பணியை செய்து வருகிறது. கொசு உற்பத்தியை தடுத்து முழுமையாக ஒழிக்க மாநில கல்லூரி மற்றும் லயோலா கல்லூரி பேராசிரியர்களின் ஒத்துழைப்புடன், தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் இந்த மாத இறுதியில் ஆராய்ச்சி மையம் தொடங்கப்படவுள்ளது. இவ்வாறு மேயர் கூறினார்.

நிகழ்ச்சியில் துணை மேயர் சத்தியபாமா, மன்ற ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.