Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அகற்றும் பணியில் 440 பேர் மும்முரம் : மெரினாவில் குவிந்தது 100 டன் குப்பை

Print PDF

தினகரன்          19.01.2011

அகற்றும் பணியில் 440 பேர் மும்முரம் : மெரினாவில் குவிந்தது 100 டன் குப்பை


சென்னை, ஜன.19:

காணும் பொங்கல் தினமான நேற்றுமுன்தினம் சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுவர் மற்றும் திருவொற்றியூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள், மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் குவிந்தனர். இவர்கள் தங்களுடன் கொண்டு வந்த உணவு மற்றும் தின்பண்டங்களை சாப்பிட்டுவிட்டு பொட்டலம் கட்டிவந்த இலை, பிளாஸ்டிக் கவர், வாட்டர் பாக்கெட் உள்ளிட்டவற்றை அங்கு வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் போடாமல் கீழே வீசிச் சென்றனர்.

இதனால் மெரினா கடற்கரை நேற்று காலை குப்பை கூளமாக காட்சியளித்தது. இவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த பணியை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது:

காணும் பொங்கலான நேற்று மெரினாவுக்கு சுமார் 5 லட்சம் பேர் வந்தனர். பெசன்ட் நகர் கடற்கரையில் சுமார் 2 லட்சம் பேர் குவிந்தனர். இவர்கள் தாங்கள் கொண்டுவந்த உணவை சாப்பிட்டுவிட்டு பேப்பர், பிளாஸ்டிக் கவர் மற்றும் வாட்டர் பாக்கெட் ஆகியவற்றை மணல் பரப்பிலும், மெரினா புல்வெளியிலும் வீசியுள்ளனர்.

இவற்றை அகற்ற இந்த 2 இடங்களிலும் மாநகராட்சி மற்றும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 440 பேர் ஈடுபடுத்தப்பட்டு சுமார் 100 டன் குப்பை, மணலை தூய்மைப்படுத்தும் இயந்திரத்தின் உதவியுடன் அகற்றப்பட்டன. கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை, தானியங்கி இயந்திரம் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டது. பனகல் பூங்கா, ஜீவா பூங்கா, தி.நகர் நடேசன் பூங்கா, அண்ணா நகர் டவர் பூங்கா உட்பட மாநகராட்சி பூங்காக்களில் மட்டும் 150 டன் குப்பை அகற்றப்பட்டன. இவ்வாறு மேயர் கூறினார்.

ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் ப்பை தொட்டிகள்

“மெரினா கடற்கரையில் குப்பை போடாமல் இருக்க தற்போது பிளாஸ்டிக் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் செய்யப்பட்ட 120 நவீன குப்பை தொட்டிகள் வைக்கப்பட உள்ளது. ஒரு தொட்டி விலை 12 ஆயிரம். பல கோடி ரூபாய் செலவில் அழகுபடுத்தப்பட்டுள்ள மெரினா கடற்கரை மற்றும் பூங்காக்களை தூய்மையாக பராமரிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்று மேயர் தெரிவித்தார்.