Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை நகர் பகுதி வீடுகளுக்கு குப்பை கொட்ட புதிய திட்டம்

Print PDF

தினகரன்      24.01.2011

கோவை நகர் பகுதி வீடுகளுக்கு குப்பை கொட்ட புதிய திட்டம்


கோவை, ஜன.24:

ஒவ்வொரு வார்டு அலுவலகத்திலும் குப்பை தொட்டி வைத்து அதில் குப்பை கொட்ட வைக்கும் புதிய திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

கோவை மாநகராட்சியில் 72 வார்டு, 2661 வீதி, 4.60 லட்சம் வீடுகள் இருக்கிறது. தினமும் சுமார் 600 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. குப்பை கொட்டுவது, அகற்றுவது, மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிப்பது, உரம் தயாரிப்பது, குப்பைகளை மறு சுழற்றியில் பயன்படுத்துவது போன்றவற்றில் நடைமுறை சிக்கல் இருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் இருந்து ஒயர், மருந்து, மாத்திரை, பழுதடைந்த வீட்டு உபயோக பொருட்கள் போன்றவை குப்பையில் கொட்டப்படுவதாக தெரியவந்துள்ளது. இவற்றை இதர சாதாரண குப்பையில் கொட்ட கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப பிரத்யேகமான குப்பை தொட்டிகளை வார்டு அலுவலகங்களில் வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் உள்ள 72 வார்டு அலுவலகங்களில் தலா ஒரு பிரத்யேக குப்பை தொட்டி வைக்கப்படும். இதில் கண்ணாடி, பீங்கான், அலுமினியம், இரும்பு தவிர, இதர வீட்டு கழிவுகளை கொட்ட அனுமதி வழங்கப்படும். மருந்து, மாத்திரை, ஒயர், பேப்பர், பென்சின், பேனா, கட்டை, ரெக்சின் போன்ற பொருட்களை இதில் கொட்டலாம். இந்த புதிய நடைமுறை ஒரு வாரத்தில் செயல்பாட்டிற்கு வரும். சாதாரண வீட்டு குப்பைகளை அருகேயுள்ள குப்பை தொட்டியில் போடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மக்கும், மக்காத குப்பைகளை வாங்க வீடு தேடி வாங்க வரும் திட்டமும் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். வார்டு வாரியாக காலை, மாலை நேரத்தில் குப்பை வாங்க வரும் நேரம் அறிவிக்கப்படும். துப்புரவு தொழிலாளர்கள், வீட்டிற்கு அருகே வந்து குரல் கொடுப்பார்கள் அல்லது மணி ஒலிக்கப்படும். அப்போது குடியிருப்பு மக்கள் குப்பை கூடையில் உள்ள குப்பைகளை தரலாம். ஏற்கனவே மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வீடுகளுக்கு இலவசமாக மக்கும், மக்காத குப்பை கொட்ட கூடை வழங்கியுள்ளது. கண்ணாடி, பீங்கான், அதிக மைக்ரான் கொண்ட பிளாஸ்டிக் போன்றவை தனியாக பெறப்படும். இவை மறு சுழற்சி முறையிலும் பயன்படுத்தப்படும். புதிய திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால், ரோடு, பொது இடம், சாக்கடைகளில் குப்பைகள் குவிந்து கிடப்பது வெகுவாக குறையும்.