Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பை பெருக்கத்தை தடுக்க வழிமுறைகள்

Print PDF
தினமலர்          20.12.2011

குப்பை பெருக்கத்தை தடுக்க வழிமுறைகள்


மறுசுழற்சி முறையில் குப்பையை மேலாண்மை செய்யும் வகையில் தயாரிக்கப்பட்ட திட்டத்தை செயல் படுத்த மாநகராட்சி முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை, பெருங்குடி பகுதியில் 40 ஆண்டுக்கு முன், குப்பை கிடங்கு உருவாக்கப்பட்டது. மாநகராட்சி தென் சென்னை பகுதியில் சேகரிப்படும் 1,400 டன் குப்பை தினமும் இங்கு கொட்டப்பட்டது. கடந்த 2005ம் ஆண்டு அறிவியல் முறையில் சோதனை செய்யப்பட்ட போது, 70 லட்சம் டன் குப்பை அங்கு தேங்கியிருந்தது. கடந்த ஆறு ஆண்டுகளில் அது ஒரு லட்சம் டன் குப்பையாக அதிகரித்துள்ளது. தென் சென்னை வளர்ச்சியால் கடந்த 20 ஆண்டுகளில் குப்பை கிடங்கை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உருவாகிவிட்டன. தினமும் டன் கணக்கில் குப்பை கொட்டப்படுவதால் அப்பகுதியில் கொசு, ஈ, வண்டு ஆகியவை உற்பத்தியாகிவிட்டன. குப்பை கிடங்கை சுற்றி ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பெருங்குடியில் குப்பை கொட்டக் கூடாது என பொதுமக்களும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தான், கடந்த ஆண்டு ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பெருங்குடி கிடங்கில் மொத்தம் 125 ஏக்கரில் குப்பை கொட்டப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் மூலம் 30 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே குப்பை கொட்ட முடிவு செய்யப்பட்டது. மீதமுள்ள 95 ஏக்கர் பரப்பளவை பசுமை நிறைந்த பூங்காவாக மாற்றும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் 65 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தவும், குப்பை கிடங்கை சுற்றி ஒன்றரை கோடி ரூபாய் செலவில் 4.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மதில் சுவர் எழுப்பவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அத்திட்டம் அப்போதே கைவிடப்பட்டது.

இப்போது புறநகரில் பல பகுதிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டப்படும் குப்பை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. அதற்காக கிடங்கு பல ஏக்கர் பரப்பளவில் ஓசைப்படாமல் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதியில் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

பெருங்குடி குப்பை கிடங்கில் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை புத்துயிருடன் செயல்படுத்த புதிய மாநகராட்சி பகீரத முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.