Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி செவிலியர்கள் சீருடையில் மாற்றம் : புடவைக்கு பதிலாக பேன்ட், சட்டை

Print PDF

தினமலர்        20.12.2011

மாநகராட்சி செவிலியர்கள் சீருடையில் மாற்றம் : புடவைக்கு பதிலாக பேன்ட், சட்டை

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்கள் சீருடையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. புடவைக்குப் பதில் தனியார் மருத்துவமனைகள் போல், செவிலியர்கள் பேன்ட், சட்டை மற்றும் தொப்பிக்கு மாறுகின்றனர். சென்னை மாநகராட்சியில், மாவட்ட குடும்ப நலத் துறையின் கீழ், 93 நகர நல்வாழ்வு மையங்களும், 24 மணி நேரமும் இயங்கும், 10 மகப்பேறு மருத்துவமனைகளும் செயல்பட்டு வருகின்றன. விரிவாக்கப் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களையும், நகராட்சி மருத்துவமனைகளையும், சுகாதாரத் துறையுடன் கலந்து பேசி, மாநகராட்சி கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகின்றன. மாநகராட்சி, மகப்பேறு மருத்துவமனைகளில், பணியாற்றும், 82 செவிலியர்கள் தற்போது வெள்ளைப் புடவை, வெள்ளை ஜாக்கெட் அணிந்து பணிபுரிகின்றனர். அறுவைச் சிகிச்சையின்போது, இந்த சீருடை, சிரமமாக உள்ளதாகவும், காலத்திற்கேற்ப மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இதை பரிசீலித்த மாநகராட்சி, தற்போது மகப்பேறு மருத்துவமனையில் உள்ள, 82 செவிலியர்களின் சீருடையை பேன்ட், சட்டைக்கு மாற்ற முடிவு செய்துள்ளது. இதன்படி, இளநீலநிற பேன்ட், இளநீலநிற சட்டை, வெள்ளை நிற தொப்பி, வெள்ளை நிற பெயர் பேட்ஜ் சீருடையாக அறிவிக்கப்பட உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி கூறியதாவது: மாநகராட்சியின், 24 மணி நேரமும் செயல்படும் மகப்பேறு மருத்துவமனையில், பணியாற்றும் செவிலியர்கள் சீருடையில், காலத்திற்கேற்ப மாற்றம் கொண்டு வரப்படுகிறது. ஓராண்டுக்கு சீருடைப்படியாக, 1,200 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதே தொகை தொடர்ந்து வழங்கப்படும். வசதியை கருதி, மாநகராட்சி பிற மருத்துவமனைகளிலும், சீருடையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து, பரிசீலித்து அமல்படுத்தப்படும். இவ்வாறு சுகாதார அதிகாரி கூறினார். மாநகராட்சியில் புதிதாக இணைந்த பகுதிகளிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களும், மகப்பேறு மருத்துவமனைகளும், மாநகராட்சியில் கட்டுப்பாட்டில் வந்தபின், அந்த மருத்துவமனை செவிலியர்களுக்கும் இந்த சீருடை மாற்றத்தை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

- ஆர்.குமார் -