Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிடம்: 20 இடத்தில் கட்ட மாநகராட்சி திட்டம்

Print PDF

தினமலர்        20.12.2011

மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிடம்: 20 இடத்தில் கட்ட மாநகராட்சி திட்டம்

திருச்சி: திருச்சி மாநகரில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ஒரு கோடி ரூபாய் செலவில் 20 இடங்களில் கழிப்பிடங்கள் கட்ட மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிக்கு பல்வேறு சலுகைகள் அரசால் அளிக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் சாய்வுதள மேடை, அவர்கள் பயன்படுத்தும் வகையில் நவீன கழிப்பிடம் ஆகிய, அரசால் கட்டி தரப்பட்டு வருகிறது. இதற்கு முன் முதல்வராக இருந்த கருணாநிதியும், தற்போது முதல்வராக உள்ள ஜெயலலிதாவும் மாற்றுத்திறனாளிகள் விஷயத்தில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படும் துறைமீது முதல்வர் ஜெயலலிதா தனிக்கவனம் செலுத்தி வருகிறார். திருச்சி மாநகரின் பல இடங்களில் மாற்றுத்திறனாளிகள் சுலபமாக பயன்படுத்தும் வகையில் கழிப்பிடங்கள் இல்லை என்பது குறையாக உள்ளது. அந்தக் குறையைப் போக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அரசின் உத்தரவுப்படி திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 20 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த கழிப்பிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கழிப்பிடமும் தலா ஐந்து லட்சம் ரூபாய் செலவில் கட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இரண்டு இடங்கள், சத்திரம் பஸ்ஸ்டாண்ட், காந்தி சந்தை, ஸ்ரீரங்கம் ரங்கநாதஸ்வாமி கோவில், திருவானைக்காவல், அம்மாமண்டபம், பொன்மலைப்பட்டி மாநகராட்சி திருமண மண்டபம், தேவர்ஹால், மலைக்கோட்டை கோவில் வளாகம். இப்ராகீம் பூங்கா, ஓயாமரி சுடுகாடு, கருமண்டபம் மின்மயான வளாகம், வடக்கு தேவித்தெரு நூலக வளாகம், காஜாபேட்டை நூலக வளாகம், செங்குளம் காலனி நூலக வளாகம், உறையூர் மேட்டுத்தெரு நூலக வளாகம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம், கோ.அபிஷேகபுரம் கோட்ட அலுவலக வளாகங்கள் என 20 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் நேச கழிப்பிடங்கள் கட்ட மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.