Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வைகையில் குப்பை கொட்டுவோருக்கு அபராதம்: மேயர் எச்சரிக்கை

Print PDF

தினமணி                30.07.2012

வைகையில் குப்பை கொட்டுவோருக்கு அபராதம்: மேயர் எச்சரிக்கை

மதுரை, ஜூலை 29:    மதுரை மாநகராட்சிப் பகுதியில் வைகை ஆறு மற்றும் கரைப் பகுதிகளில் குப்பைகள் கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும், என மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா எச்சரித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி மாசில்லா மாநகர்-2012 என்ற சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 4 மண்டலங்களிலும் சனிக்கிழமைதோறும் குறிப்பிட்ட பகுதி தேர்வு செய்யப்பட்டு, மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா தலைமையில், தீவிர துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முக்கிய சாலைகள், தெருக்கள், கால்வாய்கள், கழிவுநீர் ஓடைகள் போன்றவையும் இத்திட்டத்தின் கீழ் சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன.

 இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநகராட்சிப் பகுதியில் வைகை ஆறு மற்றும் ஆற்றின் கரையோரப் பகுதிகளை சுத்தப்படுத்தும் பணியை, சனிக்கிழமை மேயர் துவக்கி வைத்தார். அப்போது, யானைக்கல் கீழ்பாலம், மேல அண்ணா தோப்பு, ஆரப்பாளையம் ஆகிய பகுதிகளில் குப்பைகள் அகற்றுதல், கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் பணி ஆகியன நடைபெற்றன.

 இப்பணியை மேயர், ஆணையர் ஆர். நந்தகோபால், உதவி ஆணையர் அ. தேவதாஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, மாமன்ற உறுப்பினர்கள் விஜயராகவன், முத்துமீனாள், கலாவதி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

 பின்னர், மேயர் செய்தியாளர்களிடம் கூறியது:

முதல்வர் ஆலோசனைப்படி, மாநகராட்சிப் பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. துப்புரவுப் பணி, குடிநீர் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்வு காணப்படுகிறது. சிறப்பாக மக்கள் பணியாற்றும் மாநகராட்சிக்கு விருது வழங்கப்படும், என முதல்வர் அறிவித்துள்ளார்.

 இந்த விருதை பெறும் வகையில், மதுரை மாநகராட்சியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வைகையாற்றின் இருபுறங்களிலும் 4 மண்டலங்களைச் சேர்ந்த பணியாளர்கள் தீவிர துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 நகராட்சிப் பகுதியில் வைகை ஆறு மற்றும் ஆற்றின் இருகரைப் பகுதிகளிலும் சுகாதாரம் பராமரிக்கப்படும்.

 மேலும், வைகை ஆற்றிலோ, கரைப் பகுதியிலோ யாரும் குப்பைகளைக் கொட்டக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்புப் பலகைகளும் வைக்கப்படும். மீறி வைகை மற்றும் கரைப் பகுதிகளில் குப்பைகள் கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்படும். இதற்காக, சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு, தினமும் கண்காணிப்பில் ஈடுபடுவர். துப்புரவுப் பணிகள் முடிவடைந்ததும், வைகை கரைப் பகுதிகள் அழகுபடுத்தப்படும் என்றார்.