Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஈமு கோழி நிறுவனங்களுக்கு தடை விதிக்க காங்கயம் நகராட்சி மறுப்பு

Print PDF

தினமணி                 01.08.2012

ஈமு கோழி நிறுவனங்களுக்கு தடை விதிக்க காங்கயம் நகராட்சி மறுப்பு

காங்கயம், ஜூலை 31: காங்கயம் பகுதியில் பெருகிவரும் ஈமு கோழி நிறுவனங்களுக்கு தடை விதிக்க காங்கயம் நகராட்சி மறுத்துவிட்டது.

காங்கயம் நகராட்சி கூட்டம் நகர்மன்றத் தலைவர் ஜி.மணிமாறன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு நகராட்சி ஆணையர் எம்.தமிழரசு முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் 18-வது வார்டு உறுப்பினர் ஜி.வளர்மதி பேசியது: காங்கயம் நகராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலைய இருசக்கர வாகன நிறுத்தம் மற்றும் கட்டணக் கழிவறைகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மக்கள் ஏமாறாமல் இருக்க கட்டண விபரம் குறித்து அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும். இதே போல, சந்தையிலும் விற்பனைக்கு கொண்டு வரும் பொருள்களுக்கு விதிக்கப்படும் கட்டண விவரம் குறித்த அறிவிப்புப் பலகைகளும் அமைக்கப்பட வேண்டும்.

 நகராட்சித் தலைவர் ஜி.மணிமாறன்: நகராட்சிக்கு சொந்தமான் கழிவறை மற்றும் இருசக்கர வாகன நிறுத்தங்களில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதுதொடர்பாக அந்தக் குத்தகைதாரர்களுக்கு நகராட்சி ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தொடர்ந்து அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட்டால், உரிமம் ரத்து செய்யப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

 கவுன்சிலர் சிபகத்துல்லா (5-வது வார்டு): காங்கயம் நகராட்சிப் பகுதியில் புற்றீசல் போல முளைக்கும் ஈமு கோழி நிறுவனங்களை தடை செய்ய நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா?

 நகராட்சித் தலைவர்: ஆட்சியர், காவல்துறை மாவட்டக் கண்காணிப்பாளர் ஆகியோர் எச்சரிக்கை விடுத்தும் தொடர்ந்து பெருகிவரும் ஈமு கோழி நிறுவனங்களில் பொதுமக்கள் பணம் செலுத்துகின்றனர். அவர்களது சொந்தப் பொறுப்பில் பணம் செலுத்துவதால், நகராட்சி சார்பில் தடை எதுவும் விதிக்க இயலாது.

கவுன்சிலர் த.சத்யா தமிழரசு (17-வது வார்டு) : எனது வார்டில் குடிநீர்ப் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. கடந்த 20 நாள்களாக குடிநீர் வராமல் பொதுமக்கள் கடும் பாதிப்பில் உள்ளனர். குடிநீர் சீராகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகராட்சித் தலைவர்: குடிநீர்ப் பிரச்னையைப் போக்க ஒவ்வொரு வார்டிலும் ஆழ்குழாய் கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏ.அமானுல்லா (14-வது வார்டு): நகராட்சி சார்பில் நகரில் நடக்கும் கூட்டங்களில் வார்டு உறுப்பினர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை. இந்தக் குறையைப் போக்க வேண்டும்.

நகராட்சித் தலைவர்: இனிமேல் நடைபெறும் கூட்டங்களில் வார்டு உறுப்பினர்களுக்கு மரியாதை அளிக்கப்படும். கூட்டங்களில் அவர்களுக்கும் பேச வாய்ப்பு அளிக்கப்படும்.

எம்.ராஜ் (7-வது வார்டு உறுப்பினர்): தாராபுரம் சாலையிலுள்ள ஆரம்பப் பள்ளிக்கு நகராட்சி சார்பில் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்.

நகராட்சித் தலைவர்: விதிகளின்படி, நகராட்சி செலவில் குடிநீர் வழங்க வழியில்லை. ஆனால், உரிய அதிகாரிகள் முறைப்படி கோரிக்கை வைத்தால், அதுகுறித்து பரிசீலிக்கப்படும்.