Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நீர் தேக்கத்தில் கொட்டப்பட்ட கழிவுகள் :உணவகத்துக்கு நகராட்சி அதிகாரிகள்"சீல்'

Print PDF

தினமலர்                    08.08.2012

நீர் தேக்கத்தில் கொட்டப்பட்ட கழிவுகள் :உணவகத்துக்கு நகராட்சி அதிகாரிகள்"சீல்'

குன்னூர் : குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகில் செயல்பட்டு வரும் வடமாநில உணவகத்தின் கழிவுகள், நீர்தேக்கத்தில் கொட்டப்பட்டது கண்டறியப்பட்டதால், அந்த உணவகத்துக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகில் வடமாநில உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தின் கழிவுகளை, உணவக ஊழியர்கள் அருகில் உள்ள ஜிம்கானா நீர்த்தேக்கத்தில் தொடர்ந்து கொட்டி வந்துள்ளனர்.இந்நிலையில், கடந்த சில தினங்களாக மனித கழிவுகளையும் நீர்த்தேக்கத்தில் கொட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.இதனை அறியாமல் நகராட்சி சார்பில், இந்த நீர்த்தேக்கத்திலிருந்து அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் சுகாதார சீர்கேடு குறித்து மக்கள் கொடுத்த புகாரின் பேரில், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மால்முருகன் தலைமையில் சுகாதார பணியாளர்கள் ஜிம்கானா நீர்த்தேக்கத்தை ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு உணவு மற்றும் மனித கழிவுகள் நீர்த்தேக்கத்தில் கொட்டப்பட்டது கண்டறியப்பட்டது. இதை கொட்டியவர்கள் குறித்து கண்டறிய அப்பகுதி உணவகங்களை சோதனையிட்டனர். அதில் வடமாநில உணவகத்திலிருந்து தான் கழிவுகள் கொட்டப்பட்டது தெரிய வந்தது. அந்த உணவக நிர்வாகத்துக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. மேலும் மேல் குன்னூர் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. மேலும் அந்த உணவகத்துக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.கழிவு கலந்த நீர் வினியோகிக்கப்பட்டதால் அதை பயன்படுத்திய மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்

. "குடிநீரை மக்கள் நன்கு காய்ச்சிய பின் குடித்தால் நோய் அபாயம் இல்லை' என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Last Updated on Wednesday, 08 August 2012 06:20