Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதுக்கோட்டையில் குளம் தூர்வாரும் பணி துவக்கம்

Print PDF

தினமலர்                    08.08.2012

புதுக்கோட்டையில் குளம் தூர்வாரும் பணி துவக்கம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் 100 ஆண்டுக்கும் மேலாக கவனிப்பாரின்றி கிடப்பில் போடப்பட்ட குளங்கள் தூர்வாரும் பணியை நகராட்சி நிர்வாகம் துவக்கியுள்ளது.

மன்னர் ஆட்சியின்போது புதுக்கோட்டை நகரமைப்பை வடிவமைத்த நகர சபையினர், மழைநீரை சேமித்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும், நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பதற்காகவும் நகரைச் சுற்றி 40 குளங்களையும் உருவாக்கினர்.மழை தண்ணீர் தங்கு தடையின்றி நேராக குளங்களுக்கு சென்றுசேரும் விதமாக தோரண வாய்க்கால்களும், குளங்கள் நிரம்பி மறுகால் பாயும் தண்ணீர் அடுத்த குளத்துக்கு சென்றுசேரும் விதமாக இணைப்பு வடிகாலுடன் சங்கிலித்தொடர் போன்ற அமைப்பையும் உருவாக்கினர். இதன்மூலம் புதுக்கோட்டை நகர்ப்பகுதி மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது.மக்கள் தொகை அதிகரிக்கத் துவங்கியதால் நகரில் இடநெருக்கடியும் அதிகரிக்கத் துவங்கியது. வரத்துவாரிகள், தோரண வாய்க்கால்கள் அனைத்தும் படிப்படியாக ஆக்ரமிக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறியது.

இதன்காரணமாக மழை காலத்திலும் தண்ணீர் வரத்து தடைபட்டதால் குளங்கள் அனைத்தும் மணல் நிரம்பி தூர்க்கத் துவங்கியது. ஆரம்பத்தில் வரத்துவாரிகளை குறிவைத்த ஆக்ரமிப்பாளர்கள் நாளடைவில் குளங்களையும் விட்டு வைக்கவில்லை.

நகரில் தற்போது குளங்கள் இருந்ததற்கான சுவடே தெரியாத நிலையில் குடியிருப்பு பகுதிகளாக மாறியுள்ளது. எஞ்சிய சில குளங்களும் கவனிப்பாரின்றி விடப்பட்டதால் சாக்கடையின் சங்கமாக மாறிப்போனது.

நகரில் தற்போது குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்களின் கவனம் குளங்களின் பக்கம் திரும்பியுள்ளது. எஞ்சிய குளங்களையாவது தூர்வாரி பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியுள்ளது. குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்குமாறு கவுன்சிலர்கள் மூலம் நிகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நகராட்சி நிர்வாகம் முதற்கட்டமாக பல்லவன் குளம், ராஜா குளம், நைனாரி குளம், பேராங்குளம், பழனியாண்டி ஊரணி, அடப்பன் குளம், நத்தம்பண்ணை குளம் உள்ளிட்ட முக்கியமான 10 குளங்களை தேர்வு செய்துள்ள நகராட்சி நிர்வாகம், இவற்றை தூர்வாரி ஆழப்படுத்துவதற்காக 40 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதையடுத்து கடந்த 100 ஆண்டுக்கும் மேலாக கவனிப்பாரின்றி கிடப்பில் போடப்பட்ட குளங்கள் தூரிவாரும் பணி நேற்றுமுதல்(7ம் தேதி) துவங்கியுள்ளது.

நகரின் மையப்பகுதியில் உள்ள பல்லவன் குளம் தூர்வாரும் பணியை நகர்மன்றத் தலைவர்(பொறுப்பு) சேட், ஆணையர் முருகேசன், இன்ஜினியர் சுப்பிரமணியன், கவுன்சிலர்கள் ராமதாஸ், கண்ணன், தியாகு, பாண்டிக்குமார், அய்யப்பன், வீரக்குமார், அருணாசலம் ஆகியோர் பார்வையிட்டனர்.