Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உதகை ஏரியில் கழிவு நீர் கலக்காமல் தடுக்கப்படும்: நகராட்சிகளின் மண்டல இயக்குநர்

Print PDF

தினமணி            18.08.2012

உதகை ஏரியில் கழிவு நீர் கலக்காமல் தடுக்கப்படும்: நகராட்சிகளின் மண்டல இயக்குநர்

உதகை, ஆக 17: உதகை ஏரியில் கழிவுநீர் கலக்காமல் தடுக்கப்படும் என, நகராட்சிகளின் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

 உதகை நகரின் பிரதான கழிவுநீர்க் கால்வாயான கோடப்பமந்து கால்வாயிலிருந்து வெளியேறும் கழிவுநீர் உதகை ஏரியில் கலந்து ஏரியே மாசடைந்துள்ளதாக புகார் கூறப்பட்டு வந்தது. இதுதொடர்பாக தமிழக சுற்றுச்சூழல் துறை செயலர் சங்கர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஏற்கனவே ஆய்வு நடத்தியிருந்தனர்.

 இதைத்தொடர்ந்து நகராட்சிகளின் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் உதகையில் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் சிவகுமார், நகர்மன்ற பொறியாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ஆய்வின் முடிவில் செய்தியாளர்களிடம் பாலச்சந்திரன் தெரிவித்ததாவது:

 உதகை நகரின் கழிவுநீர் கோடப்பமந்து கால்வாயிலிருந்து உதகை ஏரிக்குள் செல்வது முழுமையாக தடுக்கப்படும். கழிவுநீர் அனைத்தும் காந்தல் பகுதியிலுள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரே வெளியேற்றப்படும். கோடப்பமந்து கால்வாயிலிருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 உதகை நகரில் திறந்தவெளிக் கால்வாய்களிலிருந்து கழிவுநீர் ஏரிக்குள் செல்லாமலி ருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது சுமார் 6,000 கட்டடங்கள் இணைப்பு பெறாமல் கழிவுநீரை திறந்தவெளியில் விடுகின்றனர். இவை அனைத்தும் பாதாள சாக்கடை குழாய்களில் இணைக்கப்படும். இதற்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட கட்டடங்களின் உரிமையாளர்களிடமிருந்து தவணை மூலம் பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 தமிழக அரசின் பசுமை குடியிருப்பு திட்டத்தின் கீழான வீடுகளுக்கும், அரசின் சிறப்பு திட்டங்களின் வீடுகளுக்கும் இலவசமாகவே கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்படுமெனவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
Last Updated on Saturday, 18 August 2012 09:07