Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

முகவரியில்லாத வெளிநாட்டு பொருள்களை விற்பனை செய்யக் கூடாது

Print PDF

தினமணி       18.02.2013

முகவரியில்லாத வெளிநாட்டு பொருள்களை விற்பனை செய்யக் கூடாது

தயாரிப்பாளர் மற்றும் இறக்குமதியாளர்கள் பெயர் முகவரி குறிப்பிடப்படாத வெளிநாட்டுப் பொருள்களை விற்பனைக்கு வைக்க வேண்டாம் என நாகை நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை நகராட்சிக்குள்பட்ட நாகை, நாகூர் பகுதிகளில் உள்ள பல உணவு விற்பனை நிலையங்கள், மளிகைக் கடைகள் மற்றும் வெளிநாட்டுப் பொருள் விற்பனையகங்களில், வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட ரொட்டி வகைகள், உலர் பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள், சாக்லெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விற்பனைக்கு வைக்கப்படும் வெளிநாட்டு உணவுப் பொருள்களில் தயாரிப்பாளர் மற்றும் இறக்குமதியாளர்களின் முகவரி முழுமையாகப் பொறிக்கப்பட வேண்டும் என உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், நாகை, நாகூர் பகுதிகளில் பல கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு உணவுப் பொருள்கள் பலவற்றில் தயாரிப்பாளர், இறக்குமதியாளர்களின் முழு முகவரியில்லை.

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் வழிகாட்டுதல்படியான விவரங்கள் வெளியிடப்படாத பொருள்களை விற்பனைக்கு வைப்பது சட்டப்படி குற்றம். எனவே, உரிய விவரங்கள் இல்லாத உணவுப் பொருள்களை விற்பனை செய்வதை வணிகர்கள் தவிர்க்க வேண்டும்.

இந்த அறிவுறுத்தலை மீறுவோர் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச்  சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நாகை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உணவுப் பொருள்கள் விற்பனை தொடர்பான புகார்களை 04365-247060 என்ற தொலைபேசி எண்ணில் மாவட்ட நியமன அலுவலருக்கும், 94435 26579 என்ற செல்பேசி எண்ணில் நாகை உணவுப் பாதுகாப்பு அலுவலருக்கும் தகவல் தெரிவிக்கலாம்.

தகவல்கள் குறித்து உடனடியாக விசாரணை மற்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று செய்திக் குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Monday, 18 February 2013 07:29