Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பைகள் தேக்கம்! * நகராட்சி எல்லைக்குட்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில்... * தனியார் நிறுவனம் பணிமேற்கொள்ளும் பகுதிகள் "பளிச்''

Print PDF
தின மலர்                26.02.2013

குப்பைகள் தேக்கம்! * நகராட்சி எல்லைக்குட்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில்... * தனியார் நிறுவனம் பணிமேற்கொள்ளும் பகுதிகள் "பளிச்''

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் குப்பைகள் அனைத்தும்; அகற்றப்படாமல் தேக்கமடைந்துள்ளன. தனியார் துப்புரவு பணி மேற்கொள்ளும் வார்டுகளில் மட்டும் தெருக்கள் பளிச்சென்று காணப்படுகிறது. இந்த பாரபட்ச நடவடிக்கைக்கு பொள்ளாச்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. 1 முதல் நான்கு வரையும், 16 முதல் 23 வரை உள்ள வார்டுகளில் கோவையிலுள்ள ஜென்னீஸ் ஹெல்த் அன்டு சேப்டி சர்வீஸ் நிறுவனம் துப்புரவு பணி மேற்கொண்டு வருகிறது.

இந்த வார்டுகளில் பணிபுரியும் துப்புரவுப்பணியாளர்கள், காலை 6.00 மணி முதல் பகல் 2.00 மணிவரை பணி மேற்கொள்கின்றனர். நான்கு துப்புரவு பணியாளர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் என்ற அடிப்படையில் தனியார் நிறுவனம் பணியமர்த்தியுள்ளதால் துப்புரவுப்பணி வேகமாகவும், திருப்திகரமாகவும் மேற்கொள்ளப்படுகிறது.

இதே போன்று மீதமுள்ள வார்டுகளில் பணி மேற்கொள்ளப்படுகிறதா என்றால் இல்லை என்றே பொதுமக்கள் கூறுகின்றனர். எங்களது வார்டில் பணி மேற்கொள்ளப்படவில்லை. எங்கள் வார்டுக்கும் தனியார் நிறுவன துப்புரவு பணி மேற்கொள்ள நியமிக்க வேண்டும் என்று சொல்வதோடு தற்போது பணிமேற்கொள்ளும் தொழிலாளர்கள் மீது புகாரை மட்டுமே பொதுமக்கள் கூறுகின்றனர்.

ஏன் இந்த நிலை நிலவுகிறது? இதற்கு என்னதான் தீர்வு என்று நகராட்சி நகர்நலப்பிரிவில் கேள்வி எழுப்பியபோது அதிகாரிகளிடமிருந்து வந்த பதில்:

பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 12 வார்டுகளில் மட்டும் தனியார் நிறுவனம் துப்புரவு பணி மேற்கொண்டு வருகிறது. அன்றாடம் காலை 6.00 மணி முதல் பகல் 2.00 மணி வரை துப்புரவு பணியாளர்கள் பணி மேற்கொள்கின்றனர். இதில் மொத்தம் 78 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். நகராட்சி எங்களுக்கு 114 துப்புரவு பணியாளர் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்குதுறை அதிகாரிகள் 78 பேரை மட்டுமே தேர்வு செய்து பணி மேற்கொள்ள அறிவுறுத்தியது. அதனால் அவர்களை மட்டும் தனியார் நிறுவனம் நியமித்துள்ளது.

மீதமுள்ள 24 வார்டுகளில் நகராட்சி நிரந்தர துப்புரவுப்பணியாளர் பணிமேற்கொள்கின்றனர். 25 குடும்பங்களுக்கு 3 துப்புரவு பணியாளர் என்ற அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் நகராட்சியால் நியமிக்கப்படவேண்டும். ஆனால் பொள்ளாச்சி நகராட்சியில் 25 பேருக்கு ஒருவர் என்ற நிலை கூட இல்லை. அரை ஆள் கணக்கு தான் வருகிறது. பொள்ளாச்சியில் மட்டும் 26,800 குடும்பங்கள் வசிக்கின்றன.

அக்குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தும் பொருட்கள், வீசி எறியும் குப்பைகளை தூய்மைப்படுத்த 390 துப்புரவு பணியாளர்கள் தேவை. ஆனால் பொள்ளாச்சி நகராட்சி வசம் மொத்தம் 176 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர்.

இதில் பற்றாக்குறை ஏற்பட்டதால் தான் தனியார் நிறுவனம் துப்புரவு பணி மேற்கொள்ள ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளது. தற்போதும் நிரந்தரப்பணியாளர்கள் மற்றும் தனியார் நிறுவன ப்பணியாளர்கள் என்று இருவரும் வெவ்வேறு வார்டுகளில் பணி மேற்கொண்டாலும் துப்புரவுப்பணிகளில் தொய்வான சூழலே நிலவி வருகிறது.

நிரந்தர துப்புரவுப்பணியாளர்கள் காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரையும், பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையும் பணி மேற்கொள்கின்றனர். ஆனாலும் போதுமான பணியாளர்கள் இல்லாததால் பொள்ளாச்சி நகரில் துப்புரவுப்பணி கேள்விக்குறியாகி உள்ளது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண கூடுதலாக நிரந்தர துப்புரவுப்பணியாளர்களை புதியதாக பணிஅமர்த்த வேண்டும் அல்லது ஒட்டுமொத்த துப்புரவு பணியையும் தனியார் நிறுவனத்தின் மேற்பார்வைக்கு கொண்டு செல்லவேண்டும். அப்போது நகர் தூய்மையாக இருக்கும் என்று நகர்நலப்பிரிவு அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கான முடிவை நகராட்சி கூட்டம் கூட்டப்பட்டு, மக்கள் கருத்தை பெற்று அதன் பின் நிறைவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Last Updated on Tuesday, 26 February 2013 11:23