Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் டெங்கு விழிப்புணர்வு, கொசு ஒழிப்பு தீவிரம்

Print PDF
தினமலர்          11.03.2013

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் டெங்கு விழிப்புணர்வு, கொசு ஒழிப்பு தீவிரம்


தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியில் சுகாதார குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர். அம்பேத்கார்நகர் பகுதியில் வீடு, வீடாக சென்று வேஸ்ட் பொருட்கள் அப்புறப்படுத்தினர்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள், கொசு ஒழிப்பு பணிகள் எந்த முறையில் நடந்துள்ளது. இது சம்பந்தமாக நடந்துள்ள விழிப்புணர்வு என்ன உள்ளிட்டவை சம்பந்தமாக மாநகராட்சி கமிஷனர் மதுமதி சுகாதாரத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைந்த பகுதியில் ஆங்காங்கே டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. இதனை முற்றிலுமாக தடுக்கும் நடவடிக்கையில் சுகாதார பிரிவினர் ஈடுபட வேண்டும் என்று கமிஷனர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

பொது சுகாதார பணியாளர்கள் மாநகராட்சியில் பல்வேறு சுகாதார பணிகளில் ஈடுபட்டாலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையான கொசு ஒழித்தல், கொசுப்புழு அழித்தல் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் மாநகராட்சி பணியாளர் ஈடுபட்டாலும் இன்னும் சில இடங்களில் டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்படுவதாக தகவல் வருவதால் இதில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாநகராட்சி பகுதியில் எந்த ஒரு இடத்திலும் டெங்கு அறிகுறியே இல்லை என்கிற நிலையை சுகாதார பணியாளர்கள் உருவாக்கி காட்ட வேண்டும். இந்த பணியினை தொடர் கண்காணிப்பு செய்ய வேண்டும் என்று சுகாதார அதிகாரி (பொ) டாக்டர் முத்துலட்சுமிக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.

இது சம்பந்தமாக கமிஷனர் மதுமதி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள் மற்றும் தொட்டிகளில் டெங்கு காய்ச்சலை உருவாக்க கூடிய ஏடீஸ் கொசுக்கள் உட்புகாத வகையில் நன்கு இறுக மூடி வைக்க வேண்டும். வீடுகளில் தண்ணீர் சேமித்து வைத்திருக்கும் தொட்டி மற்றும் பாத்திரங்களை ஐந்து நாட்களுக்கு ஒருமுறை பிளிச்சிங் பவுடர் கொண்டு நன்கு தேய்த்து கழுவி, காய வைத்த பின்னர் தண்ணீர் நிரப்ப வேண்டும்.

வீடுகளை சுற்றி கிடக்கும் தேவையற்ற பயன்படுத்தாத பாட்டில்கள், பிளாஸ்டிக் கப், டயர், உடைந்த பானை, பிளாஸ்டிக் குடங்கள், தேங்காய் சிரட்டை போன்ற பொருட்களை துப்புரவு பணியாளர்களை கொண்டு அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என்று சுகாதார ஆய்வாளர்களுக்கு கமிஷனர் அறிவுரை வழங்கினார்.

குடிநீரில் குளோரின் அளவுகளை கண்காணித்து அறிக்கையை சுகாதார ஆய்வாளர்கள் கமிஷனருக்கு அளிக்க வேண்டும் என்று ஆணையர் மதுமதி உத்தரவிட்டார். கமிஷனர் உத்தரவை தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி அமெரிக்கன் ஆஸ்பத்திரி அருகே உள்ள அம்பேத்கார்நகர் பகுதியில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் திருமால்சாமி தலைமையில் துப்புரவு பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று வேஸ்ட் பொருட்களை அப்புறப்படுத்துதல், அந்த பகுதியில் தேங்கி நின்ற இடங்களில் மருந்து தெளித்தல், வீடுகளின் குடிநீர் தொட்டிகளில் மருந்து விடுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

இதே போல் மாநகராட்சி பகுதி முழுவதும் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் முழுவீச்சில் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகளில் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.