Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

Print PDF
தினமணி           22.03.2013

ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

தஞ்சாவூரில் வணிகரிடமிருந்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை நகராட்சி அலுவலர்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர் தெற்கு அலங்கம் பகுதி சுல்தான்ஜியப்பா சந்தில் தடை செய்யப்பட்ட 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள், கப்புகள் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி அலுவலகத்துக்குப் புகார்கள் வந்தன. இதன் பேரில், நகர் நல அலுவலர் சிவனேசன் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் சுல்தான்ஜியப்பா சந்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில்,பிளாஸ்டிக் வியாபாரி விஜயகுமாரின் கடை, கிடங்கில் சுமார் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பைகள், கப்புகளை பறிமுதல் செய்தனர். இவை அனைத்தும் தடை செய்யப்பட்ட 40 மைக்ரானுக்கு உள்பட்ட பிளாஸ்டிக் பைகள் என நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், 40 மைக்ரானுக்கு அதிகமான பிளாஸ்டிக் பொருள்களே கிடங்கில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்துவிட்டதாகவும் கூறி அப்பகுதியைச் சேர்ந்த வணிகர்கள் தெற்கு அலங்கம் சாலையில் திடீர் மறியல் போராட்டம் மேற்கொண்டனர்.

இதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாவட்டத் தலைவர் எம். கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதையடுத்து, வணிகர்களைக் காவல் நிலையத்துக்கு வருமாறு காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெ. சங்கர் கூறினார். இதன் பின்னர், மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்தப் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக விஜயகுமார், தனது கடையில் நகராட்சி அலுவலர்கள் அத்து மீறி நுழைந்து பொருள்களைப் பறிமுதல் செய்தனர் என மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதேபோல, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பறிமுதல் செய்து லாரியில் ஏற்றும்போது இருவர் பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், தாக்க முற்பட்டனர் என சுகாதார ஆய்வாளர் சேவியர் புகார் செய்தார். இந்த இரு புகார்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.